மாலத்தீவின் எதிர்க்கட்சித் தலைவர் முகமது முய்ஸுவை நாட்டின் புதிய ஜனாதிபதியாக சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆரம்ப முடிவுகளின்படி அவருக்கு 54 சதவீத வாக்குகள் கிடைத்தன.
மாலத்தீவின் முற்போக்குக் கட்சி (பிபிஎம்) வேட்பாளர் முய்சு, மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் (எம்டிபி) தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலிஹ்வை தோற்கடித்து நவம்பர் 17 ஆம் திகதி பதவியேற்க உள்ளார்.
ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முய்ஸு சீன சார்புடையவர். மாலத்தீவின் மாபெரும் அண்டை நாடாகவும், பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரப் பங்காளியாகவும் உள்ள இந்தியாவுக்கு அடுத்து வரும் 5 ஆண்டுகளக்கு, களத்தில் சாதகம் குறைவாகவே காணப்படும்.
இந்தியா சார்புடைய சோலிஹ் முடிவுகளை ஏற்றுக்கொண்டார்.
“ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முய்ஸுவுக்கு வாழ்த்துக்கள்” என்று சோலிஹ் X இல் எழுதினார். “அமைதியான மற்றும் ஜனநாயக செயல்முறையை வெளிப்படுத்திய மக்களையும் நான் வாழ்த்துகிறேன்.” என்றும் குறிப்பிட்டார்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு பதவியேற்றதில் இருந்து நாட்டின் இராஜதந்திர நிலைப்பாட்டை புது தில்லியை நோக்கித் திரும்பச் செய்வதற்காக சோலிஹ் தீவிரமாக உழைத்தார். இதனாலேயே, இந்திய ஆக்கியரமிப்பு பற்றய அச்சம் மாலத்தீவு வாக்காளர்களிடையே ஏற்பட்டது.
முய்ஸு யார்?
பிரிட்டனில் படித்த சிவில் இன்ஜினியர், முய்சு (45) நாட்டின் தலைநகரான மாலேயின் தற்போதைய மேயராக உள்ளார்.
அவர் தனது வழிகாட்டியான அப்துல்லா யாமீனின் அரசாங்கத்தில் கட்டுமான அமைச்சராகப் பணியாற்றிய பிறகு, ஜனாதிபதி பதவிக்கு சாத்தியமில்லாத வேட்பாளராக இருந்தார்.
ஆனால் ஊழல் குற்றச்சாட்டில் யாமீனின் சிறைவாசம் முய்ஸுவை வேட்பாளராக்கியது. யாமீனின் பினாமியாக அவர் கட்சியை வழிநடத்துவதாக கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு ஒரு ஒன்லைன் சந்திப்பின் போது அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளிடம் தனது கட்சி மீண்டும் பதவிக்கு வருவது “எங்கள் இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான உறவுகளை” விரிவுபடுத்தும் என்று கூறினார்.
முய்ஸுவின் தேர்தல் வெற்றியானது, மாலத்தீவில் இந்தியாவின் அதீத அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கிற்கு எதிரான பிரச்சாரத்தினால் ஏற்பட்டது.
1988 இல் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்க இராணுவ வீரர்களை அனுப்பியது உட்பட மாலத்தீவில் விவகாரங்களில் தலையிட்ட வரலாற்றை புது தில்லி கொண்டுள்ளது. இந்தியாவின் செல்வாக்கு முஸ்லீம் பெரும்பான்மை தேசத்தில் அவ்வப்போது வெறுப்பை ஏற்படுத்துகிறது.
உலகின் பரபரப்பான கிழக்கு-மேற்கு கப்பல் பாதைகளில் ஒன்றான இந்தியப் பெருங்கடலின் நடுவில் மாலத்தீவு ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமர்ந்திருக்கிறது.
யமீனின் சர்ச்சைக்குரிய ஆட்சியின் மீதான அதிருப்தியின் பின்னணியில் சோலிஹ் 2018 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி இப்போது கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் அதே சிறையில் பல அரசியல் எதிரிகள் அடைக்கப்பட்டனர் – அவர் நாட்டை சீனக் கடன் பொறிக்குள் தள்ளுவதாக குற்றம் சாட்டப்பட்டார்.