சிறுமி வைசாலியின் கையை கொழும்பு பல்கலைகழகத்துக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!

Date:

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்டது தொடர்பான வழக்கு நேற்று (27) விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை உடற்கூற்று பரிசோதனைக்காக கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வைசாலி சாண்டிலியன் என்ற சிறுமியின் இடது கை மணிக்கட்டுக்கு கீழ் அகற்றப்பட்டது.

சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு விடுதியில் கடமை இருந்தவர்களின் அலட்சியமும் தவறுமே காரணம் என்று சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.

இது தொடர்பில் நடந்த சம்பவங்களின் தொகுப்பாக அவர்கள் கடிதமொன்றை தயாரித்து, ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

என்றாலும், இந்த கடிதத்தில் குறிப்பிட்டதொரு வைத்தியரை காப்பாற்றும் விதமாக பல தகவல்கள் குறிப்பிடப்படவில்லை என தாதியர் தரப்பு கூறுகிறது. சிறுமி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்று, கையில் கனுலா ஏற்றப்பட்ட நிலையில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டு, சில நாட்கள் வீட்டிலிருந்து வந்தே  ஊசியேற்றிச் சென்றதாகவும், அதில் பலனேற்படாத நிலையிலேயே, அந்த தனியார் வைத்தியசாலையிலிருந்து, மற்றொரு தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றதாகவும், அந்த தனியார் வைத்தியசாலையிலிருந்து 2 கைகளிலும் கனுலா ஏற்றப்பட்ட நிலையிலேயே யாழ் போதனா வைத்தியசாலைக்கு வந்ததாகவும் தாதியர் தரப்பு தெரிவிக்கிறது.

எனினும், முன்னர் பெற்றோர் வெளியிட்ட தகவலில், திருநெல்வேலி தனியார் வைத்தியசாலையில் ஒரு கையில் கனுலா ஏற்றப்பட்ட நிலையிலேயே யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்றதாக தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்று (27) யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

சிறுமியை துண்டிக்கப்பட்ட கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட உடற்கூற்று நிபுணர் ஒருவர் ஊடாக உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்த பொலிசார் கோரியமைக்கு அமைய, நீதிமன்றம் அதற்கான கட்டளை பிறப்பித்தது.

பெயர் குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி அ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

வழக்கு எதிர்வரும் 11ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற ‘சித்திரக் கண்காட்சி 2026’

மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொண்டுவரும் நோக்கில் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயத்தில்  கோலாகலமாக இடம்பெற்ற...

யாழில் பிரபல பாடசாலைக்குள் வைத்து அதிபர், ஆசிரியர்களால் ‘கும்மி’ எடுக்கப்பட்ட மாணவன்!

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர், ஆசிரியர்களால் தாக்கப்பட்டதாக குறிப்பிட்ட பாடசாலை மாணவன்...

போதைப்பொருளுடன் பெண் கைது!

புத்தளம் விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், பாலாவி பகுதியில் முக்கிய போதைப்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்