இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையோடு தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ள நிலையில் 13 ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்தி மாகாண சபைகளை உருவாக்கி அதிகாரங்களை வழங்க வேண்டியது முன்னரை விடவும் இப்போது அவசியம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த 13 ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்த வேண்டுமென இந்தியாவும் அமுல்ப்படுத்தப் போவதாக இலங்கையும் தெரிவித்திருந்த நிலையில் அதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுவதால் இந்த விடயத்தில் இந்தியா கரிசனை கொள்ள வேண்டுமென்றும் கோரியுள்ளார்.
13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில் யாழிலுள்ள தமது கட்சி அலுவலகத்தில் நடாத்திய கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது-
பதின்மூன்றாவது திருத்தச் சட்ட அமுலாக்கம் தொடர்பாக ஐனாதிபதியுடன் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் இன்று என்னையும் சந்தித்து கலந்துரையாடி இருக்கின்றனர்.
குறிப்பாக 13 வது திருத்தச் சட்டத்மை அமுல்படுத்த வேண்டும் என்கிற போது அந்தச் சட்டத்தில் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை திரும்ப்ப் பெற வேண்டியது மிகவும் அவசியம்.
இதனடிப்படையில் பறிக்கப்பட்ட அதிகாரங்களை தொடர்ந்தும் எப்படி மீள எடுப்பது சம்பந்தமான நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அதற்கமைய இன்றும் நாங்கள் தொடர்ந்து பேசி இருக்கின்றோம்.
கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி இது சம்பந்தமாக விசாரணை செய்வதற்கான அந்தக் குழுவை வர்த்தமானி மூலமாக பிரசுரிப்பதாகச் சொல்லப்பட்டது. எனினும் அது வெளிவராத நிலையில் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கு என்று பின்னர் அறிவிக்கப்பட்டிருந்த்து.
இதற்கிடையில் ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு சென்று விட்டார். இதனால் எங்களுக்கு தாமதம் ஏற்படுவதனால் இது சம்பந்தமான நிபுணர் குழுவின் ஊடாக எவ்வாறு எடுக்க வேண்டும் என ஆராய்ந்திருக்கிறோம். எனினும் ஒரு நிபுணர்கள் குழு தீர்மானித்து அரசாங்கத்துக்கு அறிவுரை வழங்குவது தாமதமாகிக் கொண்டிருக்கிறது
ஆகவே இதிலேயே இனியும் தாமதம் ஏற்படக்கூடாது என்ற காரணத்திற்காக நாங்கள் இது சம்பந்தமாக என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதாக இன்று நாங்கள் பேசிக் கொண்டோம்.
முக்கியமாக இந்தச் சட்டத்தில் இருந்து பறிபோன அந்த அதிகாரங்களை திரும்ப பெற வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கிறது. அதனை இந்தியாவும் கருத்தில் எடுத்துக் கொண்டு இருக்கிற படியால் இது சம்பந்தமாக இந்தியாவும் தன்னுடைய கருத்தை தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் எங்களுக்கு இருக்கின்றது.
ஆனால் ஜனாதிபதியினுடைய எண்ணங்கள் எவ்வாறு இருக்கின்றது என்பது பற்றி எங்களுக்கு தெரியவில்லை. ஆயினும் அவர் தனக்கு பதிலாக இங்கு இருக்கும் மற்றைய அலுவலர்கள் அல்லது அரசியல்வாதிகள் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்ற எண்ணமும் இருக்கிறது.
இந்த 13 ஆம் திருத்த சட்டத்தை அமுல்படுத்தி மாகாண சபைகளை உருவாக்க வேண்டிய அவசியம் எப்பொழுதும் இல்லாததை பார்க்கவும் இப்போது மிக மிக அதிகமாகியிருக்கிறது.
குறிப்பாக தமிழ் மக்களினுடைய சகல அதிகாரங்களும் குறைந்து குறைந்து கொண்டு வருகின்றது. அரசாங்கத்தின் அனுசரணையோடு தமிழ் மக்களுக்கு எதிரான அல்லது ஏற்றுக் கொள்ள முடியாதவாறு பலவிதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக தமிழ் மக்களின் காணிகள் அபகரிப்பு உள்ளிட்ட அதிகாரங்களின் அபகரிப்பு என்பன தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன.
ஆகவே இவற்றை நாங்கள் தடுத்து நிறுத்தி தமிழ் மக்களுடைய அதிகாரங்களை பலப்படுத்துவதற்கு முதற்கட்டமாக மாகாண சபைகள் அமைக்கப் பெறுவது அவசியம்.
அதற்குரிய நடவடிக்கைகள் எவ்வாறு எடுக்க வேண்டும் என்பது சம்பந்தமாக நாங்கள் ஆராய்ந்துள்ளோம். இன்றைய தினம் இவை பற்றி பலவிதமான கோணங்களில் நாங்கள் பேசியும் இருக்கின்றோம்.
விசேசமாக அரசியல் யாப்பில் எந்தெந்த உறுப்புரைகளின் அடிப்படையிலேயே இவற்றை நாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் முக்கியமாக 154 ரி இனுடைய ஏற்பாடுகளை நாங்கள் பரீட்சிர்த்து பார்த்தோம்.
இதில் முக்கியமாக யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவியான கோசலை மதன் அவர்களும் வந்திருந்து அவரும் இது சம்பந்தமாக தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
ஆகவே 13-வது திருத்தச் சட்ட அமுலாக்கம் சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் அந்சத் திருத்ததிலிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள பெறுவதற்கு நாங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் அரசாங்கத்தினுடைய அனுசரணை இது சம்பந்தமாக பெற வேண்டும் என்பது பற்றியும் இந்தியாவினுடைய கரிசனையை இதற்கு பெற வேண்டும் என்பது சம்பந்தமாகவும் நாங்கள் பேசிக் கொண்டோம் என்றார்.




