தனது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதில் மகிழ்ச்சி அடைவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக தெரிவித்துள்ளார்.
மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆவலுடன் இருப்பதாக குணதிலக்க மேலும் தெரிவித்தார்.
“எனது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், அதனால் நான் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.” தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று (28) அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே குணதிலக மேற்கண்டவாறு கூறினார்.
பெண் ஒருவருடன் உடலுறவு கொண்டபோது, அவருக்கு தெரியாமல் ஆணுறையை அகற்றிய குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக குற்றமற்றவர் என அவுஸ்திரேலிய சிட்னி நீதிமன்றம் இன்று (28) அறிவித்துள்ளது.
இது தொடர்பான முடிவு டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பரில் 20 ஓவர் உலகக் கோப்பைக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த போது குணதிலக சமூக ஊடக செயலியான டிண்டர் மூலம் அடையாளம் காணப்பட்ட பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான நீண்ட விசாரணையின் பின்னர், நீதிபதி சாரா ஹூஹாம் இன்று தீர்ப்பை அறிவித்ததுடன், இந்தக் குற்றச்சாட்டுக்களில் தனுஷ்க குணதிலக குற்றவாளி அல்ல என்று கூறினார்.
கிட்டத்தட்ட 11 மாதங்களின் பின்னர் குணதிலக மீண்டும் இலங்கை திரும்பவுள்ளார்.