கடந்த வாரம் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கவுரவிக்கும் நிகழ்வில் அடல்ஃப் ஹிட்லரின் நாஜி படையின் மூத்த வீரர் ஒருவர் சேர்க்கப்பட்டதையடுத்து, கனடா நாடாளுமன்றத்தின் சார்பில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்புக் கோரியுள்ளார்.
“இது பாராளுமன்றத்தையும் கனடாவையும் ஆழமாக சங்கடப்படுத்திய ஒரு தவறு. வெள்ளிக்கிழமை இந்த அவையில் இருந்த நாங்கள் அனைவரும் சூழல் தெரியாமல் நின்று கைதட்டியதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம்,” என்று ட்ரூடோ செய்தியாளர்களிடம் ஒரு சுருக்கமான அறிக்கையில் கூறினார்.
“இது ஹோலோகாஸ்டில் (யூதர்களிற்கு எதிரான நாஜிகளின் இனஅழிப்பு) இறந்த மில்லியன் கணக்கான மக்களின் நினைவகத்தின் பயங்கரமான மீறல்” என்று அவர் கூறினார்,
முன்னாள் சிப்பாய் யாரோஸ்லாவ் ஹன்கா அழைத்து கவுரவிக்கப்பட்டது, யூத மக்கள், போலந்துகள், ரோமாக்கள், எல்ஜிபிடி சமூகம் மற்றும் குறிப்பாக பிற இன மக்கள் – இரண்டாம் உலகப் போரில் நாஜி ஆட்சியால் குறிவைக்கப்பட்ட சில குழுக்கள்- ஆகியோருக்கு “ஆழமான, ஆழமான வலி” என்று கூறினார்.
நாஜி வீரர் ஹன்காவைப் பாராட்டிய ஜெலன்ஸ்கி சம்பந்தப்பட்ட புகைப்படத்திற்காக “கனடா ஆழமாக வருந்துகிறது” என்றும் ட்ரூடோ கூறினார். இந்த புகைபடத்தில் ஜெலன்ஸ்கி முஸ்டியை உயர்த்தி நாஜி வீரரை பாராட்டினார்.
இராஜதந்திர வழிகள் மூலம் ஜெலென்ஸ்கி மற்றும் உக்ரைனிய தூதுக்குழுவிடம் கனடா மன்னிப்பு கேட்டுள்ளது என ட்ரூடோ மேலும் கூறினார்.
இதேவேளை, ஹன்காவின் அழைப்பு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட விமர்சனம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவர்கள் வாய் திறக்காமல் இருந்தால் ஊடக பரபரப்பு குறைந்துவிடும் என்றும் ட்ரூடோ புதன்கிழமை எம்.பி.க்களிடம் கூறியதாக கட்சி வட்டாரங்களை மேற்கோளிட்டு, கனடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
முன்னதாக, இந்த சர்ச்சையையடுத்து கனடா சபாநாயகர் அந்தோனி ரோட்டா பதவி விலகினார். நாஜி வீரர் பாராளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டதற்கு தான் மட்டுமே பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நாஜி வீரரை கனடா பாராளுமன்ற கீழ் சபையில் அறிமுகப்படுத்திய போது, “உக்ரைன், கனடிய ஹீரோ” என்று சபாநாயகர் ரோட்டா அறிவித்திருந்தார். இதையடுத்து, ஜெலன்ஸ்கி, கனடா பிரதமர் ரூட்ரோ உள்பட அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
நாஜி வீரருக்கு அளிக்கப்பட்ட கவுரவம் பற்றி ரஷ்யாவும் பகிரங்கமாக விமர்சித்திருந்தது. “உலகப் போரில் யாருக்கு எதிராக யார் போராடினார்கள் என்ற வரலாறே தெரியாமல் வளர்ந்துள்ள கனடாவின் புதிய தலைமுறை“ என சுட்டிக்காட்டியிருந்தது.