சவூதி அரேபியாவிற்கு வீட்டுச் சேவைக்காகச் சென்ற மாத்தளையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உணவுக்கு பதிலாக ஐந்து இரும்பு கொங்கிரீட் ஆணிகள் மற்றும் துணி உலர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் இரும்பு ஸ்பிரிங் ஒன்றை விழுங்கி, வயிற்றில் ஆணியுடன் இலங்கைக்கு வந்துள்ளார்.
மாத்தளை எல்கடுவ தேயிலைத் தோட்டத்தில் வசித்து வந்த எம்.எஸ் தியாக செல்வி என்ற 21 வயதான ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு ஆணிகளை விழுங்கியுள்ளார்.
பிரதேசத்தை சேர்ந்த பதிவாகியுள்ளது.
சவூதி அரேபியாவின் தைட் பிரதேசத்தில் வீட்டுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்த இவர், சவூதி வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவரின் நேரடித் தலையீட்டினால் சில தினங்களுக்கு முன்னர் தூதரகத்தின் ஊடாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்.
தனது மகளுக்கு நடந்த கொடுமை தொடர்பில் அவரது தாயார் தியாகு குமாரியும் வத்தேகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் கொழும்பில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றின் ஊடாக வீட்டு வேலைக்காக சென்றதாகவும், அங்கு உணவின்றி கடும் அழுத்தத்திற்கு உள்ளான போது, தனது தாயாரிடம் தொலைபேசியில் தெரிவித்ததை தொடர்ந்து அது குறித்து வௌிநாட்டு முகவர் நிறுவனத்திற்கு தெரிவித்ததால் கோபமடைந்த வீட்டு உரிமையாளர்களான மகளும் தாயும் சேர்ந்து தன்னை கொடூரமாக தாக்கியதாகவும், 5 கொங்கிரீட் ஆணிகளை விழுங்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
உணவுக்கு பதிலாக இரும்பு ஆணியை விழுங்க மறுத்ததால் தான் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், தாங்க முடியாமல் ஆணியை விழுங்கியதாகவும் கூறியுள்ளார்.
பின்னர், துணிகளை உலர்த்துவதற்கு பயன்படுத்தப்படும் வெள்ளை இரும்பினால் செய்யப்பட்ட ஸ்பிரிங்கினை விழுங்கியதாகவும், அந்த அது தனது தொண்டையில் சிக்கியதாகவும் அவர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
பல நாட்களுக்குப் பிறகு வயிறு மற்றும் வாயில் இருந்து இரத்தம் வரத் தொடங்கியபோது, வீட்டு உரிமையாளர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக செல்வி கூறினார்.
எனினும், அங்கிருந்த வைத்தியர்கள் பெண்ணின் வயிற்றில் ஐந்து இரும்பு ஆணிகளைப் பார்த்ததாகவும், அதற்கு சிகிச்சை அளிக்க முன்வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அந்நாட்டு பொலிசார் வந்து அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த உள்ளூர் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் முன்வந்து பொலிஸாரின் ஊடாக தூதரக அலுவலகத்திற்கு அறிவித்து அவரை சவூதி வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்காமல் இலங்கைக்கு அனுப்பி வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு வந்து கண்டி வைத்தியசாலையில் பரிசோதித்த போது தனது வயிற்றில் மேலும் இரண்டு ஆணிகள் இருந்ததை எக்ஸ்ரேயில் காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவர்களால் ஒரு ஆணி எடுக்கப்பட்டதாகவும், மற்றொரு ஆணி தனது வயிற்றின் பின்புறத்தில் இருப்பதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட போதிலும் உரிய முறையில் பதிலளிக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான தகவல்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளுடன் வத்தேகம பொலிஸாரிடம் சென்று முறைப்பாடு செய்ததாக தாய் குறிப்பிட்டுள்ளார்.
கணவனை பிரிந்து குழந்தையுடன் தனியாக வாழும் தனது மகள், குழந்தையின் எதிர்காலத்திற்காக வெளிநாடு சென்றதாக கண்ணீருடன் தெரிவித்தார்.
மேலும் இதுபோன்ற சம்பவங்கள் யாருக்கும் நடக்காமல் இருக்க இடமளிக்க வேண்டாம் எனவும் அவர் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.