மணிப்பூரில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இணைய சேவை முடக்கம் தளர்த்தப்பட்ட நிலையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான இரண்டு மாணவர்கள் சடலங்களின் புகைப்படத்தால் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில், பழங்குடி சமூகமான குகி சமூகத்துக்கும், பழங்குடியல்லாத மைதேயி சமூகத்துக்கு இடையே இன கலவர தீ, கடந்த மே மாதம் முதல் இன்னும் அணையாமல் பற்றியெரிந்துகொண்டிருக்கிறது. இடையில், கடந்த ஜூலையில் குகி பெண்கள் இருவர் மைதேயி சமூக ஆண்களால் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்படும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்பிறகான விசாரணையில், மே மாதமே நடந்த இந்த சம்பவத்தில் குகி பெண்கள் இருவரும் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகினர் என்பதும், வீடியோ வெளியாகும் வரை விஷயம் தெரிந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர் என்பதும் மேலும் அதிர்ச்சியைத் தந்தது.
அதன்பிறகு, மேலும் பல பெண்கள் “நாங்களும் பாலியல் வன்கொடுமைக்குள்ளானோம்“ என்று வலிகளை வெளிப்படுத்தினர். பின்னர் மணிப்பூர் கலவரம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக் குழு அமைக்க, அதில் சிபிஐ தற்போது விசாரணை நடத்திவருகிறது. இன்னொருபக்கம், மாநில அரசால் முடக்கப்பட்டிருந்த இணைய சேவை செப்டம்பர் 23ஆம் திகதி மீண்டும் தொடங்கியது.
இந்த நிலையில் இணைய சேவை மீண்டும் தொடங்கப்பட்ட அன்றே, குகி இன பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்படும் வீடியோ வெளியான அதே மாதத்தில் காணாமல் போன 20 வயது மாணவனும், அவரின் தோழியான 17 வயது மாணவியும், ஆயுதமேந்திய குழுவிடம் சிக்கியிருக்கும் புகைப்படமும், காட்டில் இறந்து கிடைக்கும் புகைப்படமும் இணையத்தில் கசிந்து நாட்டை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
இவர்கள் குறித்து வெளியான தகவலின்படி, மாணவியின் பெயர் ஹிஜாம் லிந்தோயிங்காம்பி என்றும், மாணவனின் பெயர் பிஜாம் ஹெம்ஜித் என்றும் தெரிய வந்திருக்கிறது. இவர்கள் மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் இருவரும் ஜூலை 6ஆம் திகதி காணாமல் போவதற்கு முன்பு, ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கின்றனர். இப்படியிருக்க, தற்போது வெளியான ஒரு புகைப்படத்தில், காட்டில் மாணவி வெள்ளை நிற டி-சர்ட்டிலும், மாணவன் கட்டம் போட்ட சட்டையிலும் காணப்படுகின்றனர். அவர்களுக்குப் பின்னால் இரண்டு ஆண்கள் நிற்கின்றனர். அதில் ஒருவர் கையில் ஏதோவொரு ஆயுதம் வைத்திருப்பது போல் தெரிகிறது.
மற்றொரு புகைப்படத்தில், மாணவி, மாணவன் இருவரும் ஒன்றாக காட்டில் இறந்து கிடக்கின்றனர்.இதுவரை, உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மணிப்பூர் மாநில அரசு இதுகுறித்து, “கடந்த ஜூலையில் காணாமல் போன இரண்டு மாணவர்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்திருப்பது மாநில அரசின் கவனத்துக்கு எட்டியிருக்கிறது. இந்த வழக்கு ஏற்கனவே சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மாநில போலீஸ், மத்திய பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து, மாணவர்கள் காணாமல் போன சூழ்நிலையைக் கண்டறியவும், இரண்டு மாணவர்களை கொலை செய்த குற்றவாளிகளை அடையாளம் காணவும் தீவிரமாக வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிகளைப் பிடிக்க பாதுகாப்பு படையினரும் தேடுதல் பணியை தொடங்கிவிட்டனர். இதில், விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, புலனாய்வாளர்கள் தங்கள் வேலையை செய்யட்டும். அதுவரை, பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
Will u people say "wrong place wrong time"? They claim they don't touch women and children. Yet they murdered these innocent kids right after they were abducted!!! Where are the ROE? #KukiAtrocities
Justice for Linthoingambi & PhijamHemanjit #KukiTerrorists #KukiWarCrimes pic.twitter.com/PF1CJppo6b— NowInManipur (@NowinManipur) September 25, 2023
இன்னொருபக்கம், உயிரிழந்த மாணவனின் தந்தை இபுங்கோபி சிங் ஊடகத்திடம் பேசுகையில், “சில ஊடகங்களும், நபர்களும் எங்களிடம் ஒருசில புகைப்படங்களைக் காண்பித்தனர். அதைப்பார்த்த எங்கள் முழு குடும்பமும் உடைந்துவிட்டது. என் மகனின் வாழ்க்கை இப்படியே முடிந்துவிட்டதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. என் மனைவி அழுதுகொண்டே இருக்கிறார். நம்முடைய மகன் இப்போது இல்லை என்பதை நான் எவ்வாறு என் மனைவிக்கு புரிய வைப்பது” என்று கண்ணீர் விட்டார்.
கலவரத்தின் பின்னணி
மணிப்பூரில் முதல்வர் பிரேன்சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் சுமார் 53 சதவீதம் பேர் மைதேயி சமூகத்தையும் மீதமுள்ளவர்கள் குகி, நாகா உள்ளிட்ட சமூகத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். மைதேயி சமூகத்தில் பெரும்பாலானோர் இந்து மதத்தையும், குகி, நாகா சமூகத்தில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்தையும் பின்பற்றுகின்றனர். மணிப்பூர் தலைநகர் இம்பால் மற்றும் அதனை ஒட்டியுள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் மைதேயி சமூகத்தினரும் வனப்பகுதிகளில் குகி, நாகா சமூகத்தினரும் வசிக்கின்றனர்.
மணிப்பூரில் இதுவரை பதவி வகித்த 12 முதல்வர்களில் 10 பேர் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள். தற்போதைய முதல்வர் பிரேன் சிங்கும் இந்த சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். மணிப்பூரில் ஆட்சி, அதிகாரத்தில் மைதேயி சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் வனப்பகுதி மீட்புப் பணி என்ற பெயரில் குகி, நாகா சமூகத்தினரின் வாழ்விடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சூழலில் குகி, நாகா சமூகத்தினரை போன்று தங்களுக்கும் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மைதேயி சமூகத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனால் தங்களது உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்படும் என்று குகி, நாகா சமூகத்தினர் கடந்த மே 3ஆம் திகதி போராட்டம் தொடங்கினர்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3ஆம் திகதி மோதல் ஏற்பட்டது. 170 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக் கணக்கானோர் காயமடைந்தனர். பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடங்கள், வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். இந்தச் சூழலில் பல மாதங்களுக்குப் பின்னர் இணைய சேவை முடக்கம் நீக்கப்பட்டதும் வைரலான இரண்டு மாணவர்களின் புகைப்படம் பதற்றத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதால் மாநில அரசு தலையிட்டு அறிக்கை வெளியிட்டு அமைதியை நிலைநாட்ட முயற்சித்துள்ளது.