குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட பிரிவிற்கு பொறுப்பாக இருந்த ASP மெரில் ரஞ்சன் லமாஹேவ, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிஐடி காவலில் உள்ள பாதாள உலகக் குற்றவாளியான ‘ஹரக் கட்டா’ தப்பிச் செல்ல மேற்கொண்ட முயற்சி குறித்து சிஐடி விசாரணை நடத்தி வரும் வேளையில் இது நடந்துள்ளது. பொலிஸ் மா அதிபர்கள் எடுத்த தீர்மானத்திற்கு அமைய இந்த இடமாற்றம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஹரக் கட்டா, குடு சாலிந்து அடைக்கப்பட்டுள்ள சிறை பகுதிக்கு செல்ல குறிப்பிட்ட உத்தியோகத்தர்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் லமாஹேவ, ஹரக் கட்டா மற்றும் குடு சாலிடு ஆகியோருடன் பேசியதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தவிர, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பல விடயங்கள் தொடர்பாக பொலிஸ் தலைமையகத்திற்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.