நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இலங்கை அணி. பாகிஸ்தான் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியன்மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது இலங்கை அணி.
நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக இரண்டு அணிகளுக்கும் தலா 42 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. பாகிஸ்தான் அணி நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடியது. அப்துல்லா ஷபீக் உடன் இணைந்து வலுவான கூட்டணி அமைக்க பாபர் முயற்சித்தார். ஆனாலும் அதை தகர்த்தார் துனித் வெல்லலகே.
16வது ஓவரில் பாபருக்கு அபாரமாக பந்து வீசி, அவரை முன் வந்து ஆட நிர்பந்தித்தார் துனித். பந்தை பாபர் மிஸ் செய்ய விக்கெட் கீப்பர் குசல் மென்டிஸ், நொடி பொழுதில் ஸ்டம்பிங் செய்தார். இதன் மூலம் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள பாபரை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
3 நாட்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான துனித் வெல்லலகே, 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அந்தப் போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடியுமிருந்தார். அவரது ஆட்டம் உலக கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்பின் பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 252 ரன்கள் சேர்த்தது. முகமது ரிஸ்வான் 86 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் 52 ரன்களில் அவுட்டானார். இப்திகார் அகமது 47 ரன்கள் எடுத்தார். இலங்கை சார்பில் பத்திரன 3 விக்கெட்டும், மதூஷன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸ் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். குறிப்பாக, 3வது விக்கெட்டுக்கு இணைந்த குசல் மெண்டிஸ், சமரவிக்ரம ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்தது. சமரவிக்ரம 48 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து குசல் மெண்டிஸ் 91 ரன்களில் வெளியேற, கடைசி கட்டத்தில் அசலங்க பொறுப்புடன் ஆடி 49 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், இலங்கை அணி கடைசி பந்தில் 252 ரன்களை எடுத்து பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.
ஆட்டநாயகன் குசல் மென்டிஸ்.
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.