நல்லூர் கோயில் திருவிழா பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கையை கடித்து விட்டு ஓடிய நபரை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று (14) கைது செய்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் கை கடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இம்முறை நல்லூர் கோயில் திருவிழாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்வது தெரிந்ததே. சப்பர திருவிழாவிலன்று பெருமளவு மக்கள் கூடியதுடன், கூட்ட நெரிசலில் பெண்களுடன் அத்துமீறி நடந்த பல சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
நல்லூர் கோயில் நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீதித்தடைகளில் பக்தர்கள் நடந்து செல்லவும், காவடிகள் நுழையவும் அனுமதிக்கப்படுகின்றன.
நேற்று (14) இந்த வீதித் தடுப்பின் ஊடாக ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணிக்க வந்த போது, பொலிஸ் சார்ஜண்ட் மோட்டார் சைக்கிளின் பயணத்தைத் தடுத்து, மோட்டார் சைக்கிளில் அவரை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது எனக் கூறினார். குறித்த நபர் பலவந்தமாக வீதித் தடையின் ஊடாக மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்ல முற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அப்போது இந்த சார்ஜண்ட் மோட்டார் சைக்கிளை முன்னோக்கி செல்ல விடாமல் பின்பக்கமாக பிடித்தார். மோட்டார் சைக்கிளில் வந்தவர் சார்ஜண்டின் வலது கையை முழங்கைக்குக் கீழே கடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கீழே விழுந்து மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளின் பதிவு விபரங்களின் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் கொடிகாமத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.