முல்லைத்தீவில் கடந்த ஏப்ரல் மாதம் ஐயர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகபர் ஒருவரை கைது செய்துள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு, கள்ளப்பாட்டை சேர்ந்த இளைஞன் ஒருவர் பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபராக முல்லைத்தீவு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதான இளைஞன் ஏற்கெனவே குற்றப் பின்னணியுடையவர். ஏற்கெனவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், கிளிநொச்சியை சேர்ந்த குற்றவாளியொருவருடன் அறிமுகமாகியுள்ளார்.
சிறையில் இருந்து விடுதலையாகிய பின்னர், மற்றொருவரையும் இணைத்து மூவர் கொண்ட குழுவாக இவர்கள் செயற்பட்டு பல்வேறு இடங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.
முல்லைத்தீவில் பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ள நிலையில் கள்ளப்பாட்டை சேர்ந்த குறித்த இளைஞனை சந்தேகத்தில் கைதுசெய்த பொலிசார் நடத்திய விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் மற்றும் ஒரு குற்றத்திற்காக கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்ட நிலையில் கள்ளப்பாட்டு இளைஞன் தலைமையிலான குழுவினரே கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி சிலாவத்தை பகுதியில் அப்புத்துரை வேலாயுதம் (டிஸ்கோ ஜயர்) எனப்படும் கிரியைகள் செய்யும் ஜயரை கொலைசெய்து நகைகளை கொள்ளையடித்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அடுத்த வழக்கிற்கு இவரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த மன்று பணித்துள்ளது.
மற்றைய நபருக்கு பொலிசார் வலைவிரித்துள்ளனர்.