அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து பொல்கொட ஆற்றில் மலக்கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று (13) திடீரென உயிரிழந்துள்ளார்.
பண்டாரகம பொல்கொட பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
பொல்கொட ஆற்றில் கழிவுகளை கொட்டும் ஹோட்டலுக்கு எதிராக உயிரிழந்த நபர் உட்பட கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையினரும் விடுதிக்கு வந்து சுற்றுப்புறத்தை ஆய்வு செய்த போது விடுதியின் பின்புறம் ஒதுக்கப்பட்ட பகுதி அனுமதியின்றி நிரப்பப்பட்டிருப்பது தெரிந்தது.
பின்னர் கிராம மக்கள் மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகளிடம் அந்த இடத்தை சுட்டிக்காட்டி, காப்புக்காட்டில் சட்டவிரோதமாக கொட்டப்பட்டுள்ள கழிவுகள் மற்றும் கருங்கற்களை அகற்றும் வரை அந்த இடத்தில் தங்குவோம் என தெரிவித்தனர். ஹோட்டலில் இருந்து பொல்கொட ஆற்றுக்கு படகுகளில் ஏறுவதற்கு பயன்படுத்தப்படும் கான்கிரீட் கட்டுக்கு அடியில் கழிவுநீரை ஆற்றில் செலுத்துவதற்கு குழாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. உயிரிழந்த நபர் அந்த இடத்தை பரிசோதித்த போது திடீரென சுகவீனமடைந்து பண்டாரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இந்த ஹோட்டல் அமைந்துள்ள பகுதியில் இரவு நேரங்களில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் வீட்டில் தங்குவதற்கு கூட சிரமமாக உள்ளதாகவும், இது தொடர்பில் அப்பகுதி மக்கள் பண்டாரகம் பொலிஸில் பலமுறை முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அங்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் ஹோட்டல் அதிகாரிகளுக்கு எதிராக கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பண்டாரகம காவற்துறையினர் பாதுகாப்புக்காக அங்கு வந்திருந்தனர்.