நண்பனின் திருமணத்திற்கு செய்தித்தாள் வடிவில் கிண்டலான வாசகங்களோடு பேனர் வைத்து சக நண்பர்கள் அசத்தியுள்ளனர். திருமணத்திற்கு வந்த அனைவர் மத்தியிலும் அந்த பேனர் தான் ஹாட் டாபிக் ஆக இருந்துள்ளது.
இந்த பேனர் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் பிரவீன்ராஜ். இவருக்கும் அருகிலுள்ள அதிகரை கிராமத்தைச் சேர்ந்த பிரவீனா என்ற பெண்ணுக்கும் நேற்று (13) திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்காக அவரது நண்பர்கள் வைத்த வரவேற்பு பேனர் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது.
சாதாரண திருமண வாழ்த்து பேனரை போன்று அல்லாமல் வித்தியாசமாக செய்தித்தாள் வடிவில் பேனர் வைத்துள்ளனர். அதில் தலைப்புச் செய்தி என்று மணப்பெண்ணின் மனதை திருடிய குற்றத்திற்காக மணமகனுக்குகு திருமண சட்டப்படி ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது என்றும், திருமண விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அடுத்தடுத்த பத்திகளில், கல்யாண பந்தியில் கலவரம் செய்த மூன்று இளைஞர்களுக்கு கறிக்கஞ்சி கிடையாது என சிவில் கோர்ட் தீர்ப்பு அளித்தது என்றும், கறிக்கஞ்சி சாப்பிட்டு காரம் காதிற்கு ஏறி கதறும் கடைசி விவசாயி என்றும் கிண்டல் வாசகங்களுடன் வித்தியாசமான முறையில் கட் அவுட் வைத்துள்ளனர்.
மேலும் கல்யாண மாலை என்று தலைப்பிட்டு மணமகன் தேவை என்றும் சில இளைஞர்களின் பெயர், தகுதி, தொழில் ஆகிய விவரங்களோடு விளம்பரம் வெளியிட்டுள்ளனர்.
பேனரோடு நிறுத்திக் கொள்ளாமல் இதனை போட்டோ பிரேமாகவும் செய்து மணமக்களுக்கு திருமண பரிசாகவும் அளித்துள்ளனர்.
தற்போது இந்த பேனர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, இதேபோன்ற ஒரு பேனரும் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. புதுச்சேரி காரைக்கால் வாரச்சந்தை அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி திருமண நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. அருண் பிரசாத் – மதுநிகா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்தில், மாப்பிள்ளையின் நண்பர்கள் நியூஸ் பேப்பர் வடிவில் வரவேற்பு பேனர் அடித்து வைத்தனர். அது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
அதில் ‘காதலித்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை (திருமணம்) செய்து வைக்கப்படுகிறது’ கல்யாண பந்தியில் கலவரம், ‘கறிக்கஞ்சி கிடைக்காததால் கைகலப்பு’ ‘நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு’ என்றெல்லாம் பல பதிவுகள் உள்ளன.
மேலும், பந்தியில் பலகாரம் திருட்டு எனக் குறிப்பிட்டு சிறுவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும், “அடுத்த மாப்பிள்ளை நாங்க.. பொண்ணு இருந்தா தாங்க” எனக் குறிப்பிட்டு, இளைஞர்களின் புகைப்படம், பெயர் மற்றும் மற்ற விவரங்களுடன் மணப்பெண் தேவை அறிவிப்பையும் செய்துள்ளனர். இந்த பேனரும் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.