இந்தியாவுடன் மின்சார கட்டமைப்பை இணைப்பதற்கு, கடலுக்கு அடியில் கேபிள் முறையை நிறுவதற்கோ அல்லது கடலுக்கு மேலாக மின் கம்பங்கள் வழியாக இணைப்பை ஏற்படுத்தவதற்கோ இலங்கை தயாராக உள்ளது என்று இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தொழில்நுட்ப அறிக்கையின் அடிப்படையில், இரு நாடுகளும் ஒரு வாரத்தில் அதை இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை தரப்பு அனைத்து விவரங்களையும் இந்தியாவிடம் சமர்ப்பித்ததாக திட்டம் பற்றி நன்கு அறிந்த மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“கடலுக்கு அடியில் கேபிள்கள் மற்றும் மின்கம்பங்கள் வழியான இணைப்பு இரண்டையும் நாங்கள் முன்மொழிந்துள்ளோம். நாங்கள் இரண்டிற்கும் திறந்திருக்கிறோம். கடலுக்கடியில் உள்ள கேபிள்களில், ஆரம்ப செலவு அதிகம். கடலுக்கு மேலான மின்கம்பங்கள் வழிக்கு அசல் செலவு குறைவாக இருந்தாலும், அதன் பிறகு பராமரிப்புக்கு அதிக செலவாகும். இரண்டு விருப்பங்களையும் நாங்கள் முன்மொழிந்துள்ளோம், ”என்று அவர் கூறினார்.
மின் பாதையின் மொத்த நீளம் சுமார் 120 கிலோமீட்டர் இருக்கும் என்றார்.
“பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் இணைப்புப் புள்ளிகளைப் பொறுத்து இது சிறிது மாறக்கூடும்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது, இரு தரப்பினரும் இரண்டு மின் கட்டங்களையும் இணைக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இந்தியாவின் அதானி குழுமம் ஏற்கனவே இலங்கையில் காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான முதலீட்டை ஆரம்பித்துள்ளது. இந்தியா தற்போது பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டானுடன் தனது மின்கட்டத்தை இணைத்துள்ளது.