“அம்மா, இன்றைக்கு ஸ்டிரைக், அதனால் புகையிரதம் போகாது’ என்று என் மகன் என்னிடம் போனில் சொன்னான். ‘இன்று செல்ல வேண்டாம் வீட்டுக்கு வா’ என்று நான் அப்போது கூறினேன். ஆனால் அவன் அதை கேளாமல் புகையிரதத்தில் சென்றான்“ என புகையிரதத்தின் மேற்கூரையில் பயணித்த போது புகையிரத நிலையத்தின் மேற்கூரையில் மோதி உயிரிழந்த மாணவனின் தாயார் நிரோஷா குணசேகர தெரிவித்தார்.
புகையிரத சாரதிகளின் நியாயமான கோரிக்கையை அரசு கண்டுகொள்ளாததையடுத்து, அவர்கள் நேற்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் மட்டுப்படுத்தப்பட்ட புகையிரதங்களே இயங்கின. சேவையில் ஈடுபட்ட சில புகையிரதங்களில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பயணித்தனர்.
இதன்போது, புகையிரதத்தின் கூரையில் ஏறி பயணித்த மாணவனின் பிரேத பரிசோதனையின் போது மாணவனின் தாயார் இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்டுபெத்த தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயின்ற கம்பஹா மொரகொட பிரதேசத்தை சேர்ந்த டொன் டினித் இந்துவர என்ற மாணவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ராகம போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி எஸ்.ஐ.எஸ். திஸாநாயக்க முன்னிலையில் நடைபெற்ற சாட்சி விசாரணையில், கலஹிட்டியவ விவசாய சேவை நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் நிரோஷா குணசேகர சாட்சியமளிக்கையில் கூறியதாவது:
‘எனது குடும்பத்தில் மூன்று பெண்களும் ஒரு பையனும் உள்ளனர். தினித் இந்துவர ஒரே ஆண் பிள்ளை. அவருடைய கல்வியில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அதான் என் ஒரே பிள்ளையை இந்த தொழிற்பயிற்சி கல்லூரியில் சேர்த்தேன். அந்த பயிற்சி நான்கு ஆண்டுகள். இப்போதுதான் முதல் வருடம் முடிந்துள்ளது. என் மகன் கம்பஹா புகையிரத நிலையத்திற்கு சென்று, என்னை தொலைபேசியில் அழைத்து புகையிரத வேலை நிறுத்தம் காரணமாக இன்று புகையிரதம் இயங்காது என தெரிவித்தார். நான் அந்த நேரத்தில் சொன்னேன், இன்று போகாதே மகனே, வீட்டிற்கு வா என.
ஆனால் மகன் அதைக் கேட்கவில்லை. முந்தைய நாளும் அவரால் பயிற்சிக்கு செல்ல முடியவில்லை. அதற்கு காரணம், அவர் தனது ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக மருத்துவ பரிசோதனைக்கு சென்றிருந்தார். அதனால் இன்று எப்படியும் சென்றுவிடுவேன் என்றார். இந்தப் படிப்பை ஆர்வத்துடன் செய்தார். இந்த சம்பவம் தொடர்பில் ஹுனுப்பிட்டிய புகையிரத நிலையம் எமக்கு அறிவித்தது. கூடிய விரைவில் ஹுனுப்பிட்டிய புகையிரத நிலையத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டது’ என்றார்.
இங்கு சாட்சியமளித்த உயிரிழந்தவரின் தந்தையான 49 வயதான டபிள்யூ.டி.பிரிய சுகத் பெரேரா கூறினார்:
என் ஒரே மகன் இறந்துவிட்டான். கல்விக்காக கட்டுபெத்த தொழில்நுட்ப கல்லூரிக்கு செல்கிறார். ஒரு வருடமாக கம்பஹாவில் இருந்து தினமும் ரயிலில் செல்கிறார். மகனை தினமும் கம்பஹா ரயில் நிலையத்தில் இறக்கி விடுகிறேன்.
சம்பவத்தன்று நான் கம்பஹா ரயில் நிலையத்தில் இருந்து காலை 6:00 மணியளவில் புறப்பட்டேன். ஆனால் வேலை நிறுத்தம் காரணமாக என் மகன் செல்லும் ரயில் செல்லவில்லை. அந்த நேரத்தில் மகனும் அம்மாவுக்கு தொலைபேசியில் தெரிவித்தார். இன்று போக வேண்டாம், வீட்டுக்கு வருமாற கூறினார். ஆனால் முதல் நாளும் செல்லவில்லை என்றும், இன்று எப்படியும் போகவேண்டுமென்றும் மகன் கூறினார்.
அதன் பிறகு, கூட்ட நெரிசலில் 6.40 ரயிலில் ஏறினார். எனது மகனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹுனுபிட்டிய புகையிரத நிலையம் காலை எனக்கு அறிவித்தது. மகனின் உடலை எடுக்க வருமாறு கூறினர். அதன் பின்னர் மனைவியுடன் ஹுனுப்பிட்டிய புகையிரத நிலையத்திற்கு சென்றேன். மகனின் சடலத்தை ராகம வைத்தியசாலைக்கு கொண்டு வந்தேன்“ என்றார்.
இந்த மரணம் தொடர்பில் ராகம வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி என்.எல்.ஏ. ரோஷ்னியின் பிரேதப் பரிசோதனையில், தலையில் பலத்த காயம் காரணமாக மரணம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையின் பிரகாரம், ரயிலில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயம் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி தீர்மானித்தார்.