பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை வேறு நீதவானுக்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சஷி வீரவன்ச சமர்ப்பித்த விண்ணப்பத்தை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, நாளை (12) கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் தொடர்புடைய வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டதன் பின்னர், அந்த நீதிமன்றத்தில் தற்போதுள்ள வழக்கை இலக்கம் இரண்டு நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டது.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறியமைக்காக தமது கட்சிக்காரருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் வழக்கு விசாரணை நடத்தப்படும் எனவும், அந்த வழக்கில் அவருக்கு நீதி கிடைக்காது எனவும் மனுதாரர் சஷி வீரவன்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லட்டுவஹெட்டி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
நோய்வாய்ப்பட்டிருந்த போதும் இந்த வழக்கை விசாரிப்பதற்கு நீதவான் தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் சட்டத்தரணி, நீதி கிடைக்காது என்ற சந்தேகம் உள்ளதால், வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு தமது கட்சிக்காரர் நீதிமன்றத்திடம் கோருவதாகவும் தெரிவித்தார்.
இக்கோரிக்கை தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ், வழக்கு விசாரணைகளை வினைத்திறனுடன் நடத்துவதற்கு நீதவான்களால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
ஏதேனும் பிரச்சினையான சூழ்நிலை ஏற்படுமாயின் அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கேட்டுக்கொண்டார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.