நடிகை விஜயலட்சுமி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கூறி போலீஸார் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ள நிலையில், நாளை (12) சீமான் விசாரணைக்கு ஆஜராகிறார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், சமரசம் ஏற்பட்டு, அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 28ஆம் தினதி, சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், விஜயலட்சுமி திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் கடந்த 1ஆம் தினதி ஆஜரானார்.
பின்னர், அன்று இரவு கோயம்பேடு காவல் துணை ஆணையர் உமையாள் தலைமையிலான போலீஸார், விஜயலட்சுமியிடம் மதுரவாயல் காவல் நிலையத்தில் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில், சீமான் கட்சியினரும் விஜயலட்சுமி மீது புகார்களை அளித்து வந்தனர்.
விஜயலட்சுமி 7 முறை கட்டாயக் கருகலைப்பு செய்ததாக புகார் தெரிவித்திருந்த நிலையில், அதன் உண்மைத் தன்மையை அறிய, கடந்த 7ஆம் திகதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு 2 மணி நேரம் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், சீமானிடம் விசாரணை நடத்த கடந்த 9ஆம் திகதி ஆஜராகக் கூறி சம்மன் அனுப்பி இருந்தனர்.ஆனால், கட்சிப் பணிகளுக்காக வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால், 12ஆம் திகதி காலை 10 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராவதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.