ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒழுக்கம் மற்றும் அரசியலமைப்பை மீறியமை காரணமாக, கட்சியின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை நேற்று (6) முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் தொடர்பான கடிதத்தின் நகல், இடைநிறுத்தப்பட்ட உடனேயே ஜயசேகரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி இனி கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் 15 (இ) பிரிவின் கீழ் ஜயசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும். ஒழுக்காற்று மீறல் தொடர்பான குற்றப்பத்திரிகையை எதிர்வரும் 14 நாட்களுக்குள் அனுப்பி வைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம் தொடர்பான கடிதத்தின் நகல் தேர்தல் ஆணைக்குழு தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜயசேகர, கட்சியின் தலைவர் எனது கழுத்தை அறுப்பார் என நினைக்கவில்லை என தெரிவித்தார்.
கட்சியின் செயலாளர் பதவியை விட்டுக்கொடுக்குமாறு கட்சித் தலைவர் நேரடியாகச் சொல்லியிருக்கலாம்.
தொடர்ந்து அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் கொண்ட ஒருவருடன் பழகும் போது இதுபோன்ற கேள்விகள் எழுவதாக அவர் கூறினார்.
அரசாங்கத்திற்கு ஆதரவளித்தவர்களின் சதியில் மைத்திரிபால சிறிசேனவும் பலியாகியுள்ளதாக ஜயசேகர மேலும் வலியுறுத்தியுள்ளார்.
ஹெலிகொப்டர் சின்னத்திதின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் செல்லுபடியாகும் என்றும் ஹெலிகாகொப்டர் சின்னத்திதின் கீழ் செய்யப்பட்ட கூட்டணியும் செல்லுபடியாகும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு கூடிய விசேட அரசியல் கூட்டத்தில் வெற்றிடமாகவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கான பதில் செயலாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.