சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை இன்று (6) முதல் வெள்ளிக்கிழமை (08) வரை மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரத் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 09.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.
உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலம் மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (திருத்தம்) சட்டமூலம் இன்றும் (6) நாளையும் (7) மாலை 4.30 மணி முதல் 7.00 மணி வரை விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டு சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பை நாளை (07) மாலை 7.00 மணிக்கு நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. பின்னர் இரண்டு சட்டமூலங்களின் மூன்றாம் வாசிப்பு இரவு 7.30 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த இரண்டு நாட்களிலும் வாய்மூல கேள்வி பதில் அமர்வுகளை வேறொரு நாளுக்கு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கமைய, சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம் அந்த இரண்டு நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்தப்படும். முன்னதாக தீர்மானித்தபடி, நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஓகஸ்ட் 8ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும்.