ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 வெளிப்படுத்தியமை தொடர்பில் சர்வதேச மட்ட விசாரணை அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து வெளிப்படுத்தப்பட்டதற்கு இலங்கை அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக அரசாங்கம் ஒரு வெளிப்பாட்டைக் கொண்டு வந்திருக்க வேண்டும். அதன்படி, சனல் 4 வெளிப்படுத்தியமை தொடர்பில் சர்வதேச மட்ட விசாரணை அவசியமானது” என்று திரு. பிரேமதாச கூறினார்.
“கொழும்பின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று அமைச்சர் ஒருவர் இன்று கூறினார். இந்த அறிக்கையின் மூலம் கர்தினாலை அமைச்சர் அவமதித்துள்ளார். எனக்கு எதிராக வாக்களிக்குமாறு கர்தினால் மக்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் அமைச்சர் கூறினார். இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.
கர்தினால் தமக்கு எதிராக வாக்களிக்குமாறு கூறியதற்கு வருந்தவில்லை என்றும் ஈஸ்டர் தாக்குதலினால் ஏற்பட்ட வலியினால் தான் அவ்வாறு கூறியதாகவும் கத்தோலிக்க சமூகத்தில் இன்னமும் வலி இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.