பிரிட்டனில் இளம் ரிக்ரொக் பிரபலமான மகேக் புகாரி, அவரது தாயாருக்கு கொலைக்குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 129,000 பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த மகேக் புகாரி, தன்னினும் வயது குறைந்த இளைஞனுடன், தனது தாயாருக்கு ஏற்பட்ட காதலை தொடர்ந்து, நிகழ்ந்த கொலையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
23 வயதான மகேக் புகாரி தனது தயாருடன் எடுத்த வீடியோக்களையும் அடிக்கடி பகிர்வார். தனது தாயாரை பற்றி அப்போதெல்லாம் பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.
45 வயதான அன்ஸ்ரீன், 21 வயதான சாகிப் ஹுசைனைச் சந்தித்ததை தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள், அவர்களுக்கள் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து நிகழ்ந்த இரட்டைக்கொலை, தாய் மற்றும் மகள் இருவரையும் இரட்டைக் கொலை குற்றவாளிகளாக்கியுள்ளது.
இருவருக்கும் இப்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, மகேக்கிற்கு குறைந்தபட்சம் 31 ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அன்ஸ்ரீனுக்கு குறைந்தபட்சம் 26 ஆண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அன்ஸ்ரீனும் சாகிப்பும் முதன்முதலில் 2019 ஆம் ஆண்டில் வீடியோ செயலியான அசார் மூலம் ஒன்லைனில் அரட்டையடிக்கத் தொடங்கினர்.
பின்னர், அவர்கள் தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டு ஒவ்வொரு நாளும் பேசிக்கொண்டிருந்தனர். சுமார் மூன்று ஆண்டுகள் இந்த உறவு நீடித்தது.
லீசெஸ்டர்ஷைர் காவல்துறையைச் சேர்ந்த Det Insp மார்க் பாரிஷ், சாகிப் தன் மீது காட்டிய ஆர்வத்தால் அன்ஸ்ரீன் “மகிழ்ச்சியடைந்தார்” என்றார்.
அன்ஸ்ரீனும் சாகிப்பும் முதலில் ஒரு வீடியோ அரட்டை செயலியில் சந்தித்ததை தொடர்ந்து,
ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் ஷிஷா ஓய்வறைகளில் – அவர்கள் பல முறை சந்தித்ததாக அவர் கூறினார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
ஆனால் 2021 ஆம் ஆண்டில், உறவு மோசமாக மாறத் தொடங்கியது. அதை தொடர்ந்து, அன்ஸ்ரீன் அந்த உறவிலிருந்து விலக முயன்றார். ஆனால், சாகிப்பால் அதை ஏற்க முடியவில்லை.
அன்ஸ்ரீனை சமரசப்படுத்தி காதல் உறவை தொடர சாகிப் போராடினார். உறவை நிறுத்துவதென்ற முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சாகிப் மன்றாடியுள்ளார்.
எனினும், அன்ஸ்ரீனின் முடிவில் மாற்றமிருக்கவில்லை. இதையடுத்து, இருவரும் உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோக்களை, அவரது கணவனுக்கு அனுப்பப் போவதாக, அன்ஸ்ரீனை மிரட்டியுள்ளார் சாகிப்.
இதனால் பீதியடைந்த அன்ஸ்ரீன், அந்த ஆண்டின் இறுதியில், தனது மகளுக்கு எல்லாவற்றையும் கூறினார்.
சாகிப் பிளாக்மெயில் செய்வது பற்றி காவல்துறைக்கு செல்வதற்கு பதிலாக, மகேக் விஷயங்களை தன் கைகளில் எடுக்க முடிவு செய்தார்.
தனது தாயாருக்கு உதவுவதற்காக, மகேக் தனது நண்பரான கார் மெக்கானிக் ரேகான் கர்வானின் உதவியை நாடினார்.
அன்ஸ்ரீனுடன் காதல் உறவில் இருந்தபோது, சாகிப் 3,000 பவுண்ஸ் பணம் செலவிட்டுள்ளார். அந்தப் பணத்தை வழங்குவதாகவும், ஒரு சந்திப்புக்கு வருமாறும் சாகிப்பை அழைக்க திட்டமிட்டனர்.
ரேகான் தனது நண்பரான ரயீஸ் ஜமால் மற்றும் ரயீஸின் உறவினர் அமீர் ஜமால் மற்றும் பிற நண்பர்களான சனாஃப் குலும்முஸ்தபா, நடாஷா அக்தர் மற்றும் முகமது படேல் ஆகியோரின் உதவியைப் பெற்றார்.
11 பெப்ரவரி 2022 அதிகாலையில், லீசெஸ்டரில் உள்ள டெஸ்கோ பல்பொருள் அங்காடிக்கு வந்த மகேக் குழு, சாகிப்பிற்காக காத்திருந்தது. அவரை பதுங்கியிருந்து தாக்க திட்டம் தீட்டப்பட்டது.
சாகிப் தனதுசொந்த ஊரான பான்பரியில் இருந்து லீசெஸ்டருக்கு செல்வதற்கு நண்பர்களின் வாகன உதவியை நாடினார். நண்பர்களில் ஒருவரான ஹாசிம் இஜாசுதீன் அவரை ஏற்றிச்செல்ல சம்மதித்தார்.
“நடப்பது எதுவும் ஹாஷிமுக்குத் தெரியாது, அவர் சாகிப்பின் நண்பர். அவர் சாகிப்பை லீசெஸ்டருக்குக் கொண்டு செல்ல ஒப்புக்கொண்டார் – முற்றிலும் அப்பாவியாக” என்று விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
“பிரதிவாதிகள் எவரையும் அவர் அறிந்திருக்கவில்லை, என்ன நடக்கிறது என்பது பற்றி எதுவும் தெரியாது. சில விஷயங்களில் தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருக்கும் நபராகினார்“ என்றனர்.
சாகிப்பும் ஹாஷிமும் மதியம் 01:17 GMTக்கு டெஸ்கோ கார் பார்க்கிங்கிற்கு வந்தனர். அவர்கள் வேகத்தைக் குறைத்து சில நொடிகள் காத்திருந்தனர், ஆனால் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்தனர்.
அவர்கள் விரைவில் அந்த இடத்தை விட்டு வெளியேறினர், ஆனால் அவர்களது ஸ்கோடா காரை, இரண்டு கார்கள் பின்தொடர்ந்தன – நீல நிற சீட் லியோன், ரயீஸால் இயக்கப்பட்டது. பின்னால் சென்ற ஆடி டிடி ரேக்கனால் இயக்கப்பட்டது.
மகேக் மற்றும் அன்ஸ்ரீனின் விசாரணையில் அவர்கள் ஆடியில் பயணித்தவர்கள் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், மகேக் சாகிப்பை அழைத்தது போன் பதிவுகளில் இருந்து போலீசாருக்கு தெரிந்தது.
“ஆனால் என்ன சொல்லப்படுகிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் வார்த்தைகள் பரிமாறப்படுகின்றன.” என பொலிசார் தெரிவித்தனர்.
இந்த உரையாடலுக்கு ஒரு நிமிடம் கழித்து, சாகிப் 999க்கு அழைத்தார்.
தனது காரை இரண்டு கார்கள் பின்தொடர்வதாகவும், தனது காலை வீதியில் இருந்து தள்ளிவிட முயன்றதாக அவர் கூறினார்.
அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றபோது பேசிய விடங்களும், அவசர சேவை அழைப்பில் பதிவாகியுள்ளது.
சாகிப் மற்றும் ஹாஷிமின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் 999 அழைப்பை ஒளிபரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
இறுதி தருணங்கள் மிகவும் வேதனையானவை. இறுதியில், சாகிப் இன்னும் இருக்கிறாரா என்று அவசர சேவை கட்டுப்பாட்டாளர் கேட்பதற்கு முன்னர், ஒலிப்பதிவு 10 வினாடிகள் அமைதியாக இருக்கும்.
01:30 க்குப் பிறகு, மீட்பு ஓட்டுநர் ஒருவர் அந்த பகுதியால் பயணித்துக்கொண்டிருந்தபோது, ஒரு மரத்திற்கு அருகில் கார் தீப்பிடித்ததைக் கண்டார். யாரும் போலீஸை அழைக்கவில்லை என்பதை உணர்ந்த அவர், தனது வாகனத்துடன் சாலையை மறித்தார்.
தீ அணைக்கப்பட்ட பிறகு, காரில் இரண்டு பேரின் உடல்களை போலீஸ் அதிகாரி ஒருவர் பார்த்தார்.
விபத்து நடந்த இடத்தின் பாதுகாப்பு கமரா காட்சிகளின் அடிப்படையில், நடாஷா செலுத்திய காரை அடையாளம் கண்டு, அவரை எரிபொருள் நிரப்பபு நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
பின்னர் மகேக், அன்ஸ்ரீனின் வீட்டிற்கு பொலிசார் சென்றனர். பொலிசாரை கண்டதும், அவர்களிடம் எப்படி பொய் சொல்லப் போகிறேன் என மகேக் தனது தாயாருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.
பின்னர், தான் ஒரு நிகழ்ச்சிக்கு அந்த பாதையால் சென்றதாக பொலிசாரிடம் கூறினார்.
பொலிசார் தாயையும், மகளையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தபோது, உண்மை புலப்பட்டது.