“யார் புகார் அளித்தாலும், காவல்துறை அது தொடர்பாக விசாரணை நடத்துவது அவர்களது கடமை. உண்மையாகவே நான் குற்றவாளியாக இருந்தால், என் மீது நடவடிக்கை எடுங்கள் என்றுதான் கூறுகிறேன். அதற்கெல்லாம் பயந்த ஆள் நான் இல்லை” என்று விஜயலட்சுமி புகார் குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.
திருப்பூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், நடிகை விஜயலட்சுமி புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்,“யார் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மை இல்லை எனில், விளக்கம் சொல்லத் தேவையில்லை. கருத்துப் பெட்டகத்தின் சாவி நல்ல கேள்விதான். ஒரு நல்ல பதிலின் தாயே, நல்ல கேள்விதான் என்று கூறுவார்கள். எனவே, பத்திரிகையாளர்கள் நல்ல கேள்வியைத்தான் கேட்க வேண்டும்.
என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டை நம்பியிருந்தால், இத்தனை லட்சம் இளைஞர்கள் என்னை எப்படி பின்தொடர்வார்கள்? அவதூறுக்கு அஞ்சுபவன் அற்ப வெற்றியைக்கூட தொட முடியாது. அது ஏன் ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும், இதுகுறித்து பேசப்படுகிறது. ஏன் பேசப்படுகிறது? 11 ஆண்டுகளாகவா ஒரே குற்றச்சாட்டு. நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ஒரு பெண் ஏமாற்றிவிட்டு, அவருடைய கணவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதை ஏன் ஊடகத்தில் இருப்பவர்கள் ரசிக்கிறீர்கள். எனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். என்னைச் சுற்றி லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். ஒரு கனவு இருக்கிறது.
அதையே திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். இதேபோன்ற குற்றச்சாட்டு, எனக்கு முன்னாடி 5 பேர் மீது இருக்கிறது. வெவ்வேறு மொழிகளில் உள்ளது. எனவே, இனிமேல் இந்த விவகாரத்தை விட்டுவிடுங்கள். அவசியமான கேள்விகளை கேளுங்கள், அவசியமற்ற கேள்விகளைத் தவிர்த்துவிடுங்கள். நான் உதிர்க்கும் வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக இருக்கக்கூடாது. வருங்கால தலைமுறைகளை வழிநடத்தும் ஒரு தத்துவமாக, பொன்மொழியாக, புரட்சிகர பாதையாக இருக்க வேண்டும்.
நீங்கள் இதுபோல் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான், அவர்கள் அதையே செய்து கொண்டிருக்கிறார்.திருப்பூரில் நேற்று கூடிய கூட்டத்தைப் பார்த்திருப்பீர்கள். என் மீது இன்னும் பல குற்றச்சாட்டுகள் கூட வரும். யார் புகார் அளித்தாலும், காவல்துறை விசாரணை நடத்தும் அது அவர்களது கடமை. உண்மையாகவே நான் குற்றவாளியாக இருந்தால், அதன்பிறகு நீங்கள் நடவடிக்கை எடுங்கள் என்றுதான் கூறுகிறேன். அதுக்கு பயப்படுகிற ஆள் இல்லையே நான்” என்றார்.
மேலும், தேர்தலுக்கு பணம் கொடுப்பதை நிறுத்துங்கள். நாட்டின் தேர்தல் செலவு குறையும். உடை, உணவு, பண்பாடு என வேறுபாடு நிறைய இருக்கும் போது, ஒரே நாடு, ஒரே தேர்தல் எப்படி சாத்தியப்படும்? காவிரியில் முதலில் தண்ணீர் வரட்டும். கச்சத்தீவு, முல்லைப் பெரியாறு என பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன.
காவிரியில் தண்ணீர் கொடு என்று தமிழகத்தில் பாஜக போராடுமா? மகாராஷ்டிரம் மாநிலத்தில் ரூ.5000ம் கோடி செலவு செய்து, சட்டப்பேரவை உறுப்பினர்களை விலை கொடுத்து பாஜக வாங்கியது. இது ஊழல் இல்லையா? லஞ்சம் இல்லையா? உத்தரப் பிரதேசத்தில் கல்வி, சுகாதாரம், மருத்துவம் உள்ளதா? பாஜகவின் ஊழல் சொல்லி மாளாது. கர்நாடகாவில் பாஜக தோற்கக் காரணமே ஊழல் தான்.
திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்டதை வரவேற்கிறோம். அதேபோல் அதிமுகவினர் ஊழல் பட்டியலை பாஜக வெளியிட வேண்டும். ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுவதை தான், உயர் நீதிமன்றம் உண்மையை சொல்லி உள்ளது. தனி நபர் வருமானம் அதிகரித்திருந்தால் குடும்பத் தலைவிக்கு எதற்காக ரூ.1000-ம் தர வேண்டும். மாறி மாறி திமுகவும், அதிமுகவும் 50 ஆண்டுகாலமாக தமிழகத்தை ஆட்சி செய்து, குழந்தைகள் இன்னும் பட்டினியுடன் இருப்பதைத் தான் காலை உணவுத் திட்டம் காட்டுகிறது.” என்று அவர் கூறினார்.