26.7 C
Jaffna
March 11, 2025
Pagetamil
இலங்கை

அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கு: சிறைச்சாலை பொறுப்பதிகாரியை நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு!

பொலன்னறுவை பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு பிரதிவாதியை கம்பஹா விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் வேறு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றமைக்கான காரணங்களை வழங்குவதற்காக, மஹர சிறைச்சாலை அத்தியட்சகரை, செப்டெம்பர் 19 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கம்பஹா விசேட மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் நேற்று (31) பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று (31) பிற்பகல் சஹான் மாபா பண்டார (தலைவர்), ரஷ்மி சிங்கப்புலி மற்றும் ருவன் பத்திரன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிணையில் விடுவிக்கப்பட்ட 35 பிரதிவாதிகள் நீதிமன்றில் ஆஜராகியதோடு, பிணையில் விடுவிக்க முடியாத காரணத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு பிரதிவாதிகளில் ராமையா சத்தியகுமார் என்ற பிரதிவாதியை மட்டும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கசுன் சமன் குமார என்ற பிரதிவாதி மற்றுமொரு வழக்குக்காக கேகாலை மேல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இந்த விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டிய சந்தேகநபர் அனுமதியின்றி வேறு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவது பாரிய பிரச்சினை எனவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை வேறு நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதித்தால் இந்த வழக்கைதொடர்ச்சியாக நடத்த அது தடையாக அமையும் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். எனவே இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அவர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார். இதில் கவனம் செலுத்திய நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததற்கு காரணம் காட்ட மஹர சிறைச்சாலை பொறுப்பதிகாரியை அடுத்த நீதிமன்ற திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி பிற்பகல், அலரி மாளிகைக்கு அழைத்து வரப்பட்ட குண்டர்கள், மஹிந்த ராஜபக்சவை சந்தித்த பின்னர், கொலைவெறியுடன் அங்கிருந்பு புறப்பட்டு சென்று, காலி முகத்திடலில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த தகவல் நாடு முழுவதும் பரவி, பொதுஜன பெரமுனவினருக்கு எதிராக வெகுஜன எழுச்சி ஏற்பட்டு, கையில் சிக்கிய பெரமுனக்காரர்களை மக்கள் நையப்புடைத்தனர். அலரி மாளிகைக்கு கூட்டத்துக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்த  பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பாளராக இருந்த அஹங்கம விதாரனலாகே ஜயந்த குணவர்தன ஆகியோர் நிட்டம்புவ நகரத்தில் பெரும் கூட்டத்திடம் சிக்கி, கொல்லப்பட்டனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு, கொலைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நாற்பது பேரைக் கைது செய்தனர்.

அந்த நாற்பது பேரில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டார். இருவர் மஹர சிறையில் உயிரிழந்தனர். கைது செய்யப்படுவதற்கு முன்னர் இருவர் தப்பிச் சென்றுள்ளனர். மீதமுள்ள முப்பத்தேழு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், தலைமறைவான இரண்டு குற்றவாளிகள் உட்பட முப்பத்தொன்பது குற்றவாளிகளுக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வழக்கு செப்டம்பர் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுமியை போலி அடையாளத்தில் வெளிநாடு அனுப்பிய முகவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

Pagetamil

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

Leave a Comment