காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதிகோரி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இன்று புதன்கிழமை (30) மன்னார் சதொச மனித புதைகுழியில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமாகி இடம்பெற்றது.
வடக்கு, கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்துகொண்டிருந்த இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, மன்னார் சதொச மனித புதைகுழியில் ஆரம்பமாகி, மன்னார் சுற்று வட்டப் பாதை ஊடாக தபாலகம், வைத்தியசாலை ஊடாக சென்று, மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இறுதி நிகழ்வுடன் நிறைவடைந்தது.
இதன்போது கறுப்புக் கொடிகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை சுமந்து பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தை ஆர்ப்பாட்டப் பேரணி வந்தடைந்ததும், அங்கு ஒன்றுகூடிய காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் ஐ.நாவுக்கான மகஜர் ஒன்றை மன்னார் மறைமாவட்ட பங்குத் தந்தையர்களான ஜெயபாலன் குருஸ் மற்றும் மர்க்கஸ் ஆகியோரிடம் கையளித்தனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் நானாட்டான் பிரதேசசபை தவிசாளர் திருச்செல்வம் பரன்சோதி, முன்னாள் வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் தியாகராசா நிரோஷ், முன்னாள் மன்னார் நகரபிதா ஞானப்பிரகாசம் ஜெராட், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசன், முல்லைத்தீவு தராசு சின்னத்தில் முஸ்லிம் சுயேட்சைக்குழுவில் போட்டியிடும் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.