27 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இந்தியா

‘விஜயலட்சுமியா?… விஜய் உடன் கொள்கைக்கூட்டணியை வரவேற்போம்’: சீமான்

கரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருகை தந்த சீமான், முதலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என்னிடம் சொல்வதற்கு செய்தி ஒன்றும் இல்லை. அதனால், நீங்கள் வேண்டுமானால் கேள்வி கேளுங்கள். நான் பதில் சொல்கிறேன்” என்றார். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சீமான், “ஒத்த கருத்துடைய கட்சி எங்கேயும் இருக்கிறதா… உங்களைப்போல ஒரு செய்தியாளர் கேட்டதற்கு, ‘ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணி அமைக்க அழைத்தால், பார்ப்போம்’ என்று சொன்னேன். காசு கொடுத்துத்தான் தேர்தலில் வெல்ல முடியும் என்கிற சூழலை இங்கிருப்பவர்கள் உருவாக்கிவிட்டார்கள். இதனால், மற்ற கட்சிகள் அவர்களோடு போய் நின்றால், சில சீட்டுகளைக் கொடுத்து, காசு கொடுத்து நம்மை வெல்லவைத்து விடுவார்கள் என்று நினைத்து அவர்களோடு, கூட்டணி வைத்துக்கொள்கிறார்கள். ஆனால், நாங்கள் அப்படிச் செய்ய முடியாது இல்லையா… அப்படியே கூட்டணி வைக்க நினைத்தாலும், அதற்குக் காத்திருக்க வேண்டும். 10 சதவிகித வாக்குகளுக்கு நாங்கள் வாங்க வேண்டும்.

தற்போது, 7 சதவிகித விழுக்காட்டைத்தான் பெற்றிருக்கிறோம். 10 சதவிகிதத்துக்கு மேல் வாங்கும்போதுதான், எங்களுடன் கூட்டணி அமைக்கலாம் என்று மற்ற கட்சியினர் வருவார்கள். அப்படித்தானே மக்கள் நலக் கூட்டணி என்று ஆரம்பித்து, தே.மு.தி.க விஜயகாந்தோடு கூட்டணி வைத்தார்கள். அப்போது அவர் 10 விழுக்காட்டைத் தொட்டிருந்தார். அ.தி.மு.க மாநாடு என்பது அந்தக் கட்சிக்காரர்களுக்கு ஓர் உற்சாகத்தைக் கொடுத்திருக்கும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என்ற வகையில், கட்சியும், சின்னமும் அவருடையது என்று உறுதிசெய்யப்பட்டிருப்பதால், தொண்டர்கள் ஓர் இடத்தில் கூடும்போது உற்சாகம் வரும். எல்லாக் கட்சிகளுக்கும் அப்படித்தான் உற்சாகம் வரும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் தனித்துத்தான் போட்டியிடவிருக்கிறோம். சி.ஏ.ஜி அறிக்கையைப் பற்றிக் கேட்கிறீர்கள். மாறி மாறி குறை சொல்கிறார்கள். அண்ணாமலை, தி.மு.க அமைச்சர்கள்மீது ஊழல் பட்டியலை வெளியிடுகிறார். அ.தி.மு.க-வினரைப் பற்றி ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறாரே… அந்தக் கட்சி ஏதோ புனிதக் கட்சிபோலவும், அதில் இருப்பவர்களெல்லாம் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தகாரர்கள்போலவும் காட்ட நினைக்கிறாரே… அ.தி.மு.க-வோடு கூட்டணிவைப்பதால், அவர் அந்தக் கட்சியை விமர்சனம் செய்வதில்லை. உங்கள் கட்சியிலேயே ரௌடிகள், குற்ற வழக்கு பின்னணி உள்ளவர்களையே, ‘கட்சிக்கு வாங்க. வழக்கை ரத்து பண்ணுகிறோம்’ என்று சொல்லிச் சொல்லியே கட்சியில் சேர்த்துக்கொள்கிறீர்கள். நேர்மையாளர் என்றால் எல்லாவற்றையும் பேச வேண்டும்.

கொடநாடு கொலை வழக்கைப் பற்றியும் அண்ணாமலை பேசுவதே இல்லையே… ஆறு பேர் இறந்திருக்கின்றனர். அவர்கள் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். கொன்றது யார், அவர்கள் ஏன் கொலைசெய்யப்பட்டனர் என்பதைப் பேச வேண்டும் இல்லையா… அதைப் பற்றிப் பேசுவதே இல்லை. அங்கு இறந்தவரின் உறவினர் ஒருவர், ‘எடப்பாடி பழனிசாமியை விசாரணை செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருப்பதை நான் வரவேற்கிறேன். ‘இரண்டே மாதங்களில் கொடநாடு கொலை வழக்கை விசாரிப்போம்’ என ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் அறிக்கையில் சொன்ன தி.மு.க தலைவர் ஸ்டாலின், இரண்டரை வருடங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஏனென்றால், எடப்பாடியிடம் நீங்கள் பணம் வாங்கியிருக்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் சுடச் சொன்னது யார் என்று கேட்டிருக்க வேண்டும். அதன்பேரில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா… ஆனால், அப்படி எடுக்கவில்லை. தமிழர்களின் உயிர் இவ்வளவு கேவலமானதாக ஆகிவிட்டது. அதைக் கேட்க நாதியில்லை. இந்தியா கூட்டணிதான் நீட் தேர்வைக் கொண்டுவந்தது. ஆனால், அவர்களே வரும் தேர்தலில் அந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அதை நீக்குவோம் என்று சொல்வது முற்றிலும் நாடகம். கச்சத்தீவை தாரை வார்த்ததும் இவர்கள்தான். ‘எங்களுக்கும், அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று இப்போது மாற்றிப் பேசுகிறார்கள்.

18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தது தி.மு.க. அப்போதெல்லாம் கச்சத்தீவை மீட்கப் பாடுபட்டது என்ன என்று சொல்லுங்கள். கல்வியைப் பொதுப்பட்டியலுக்குக் கொண்டுபோக விட்டுவிட்டு, இப்போது மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வாருங்கள் என்று கோரிக்கைவைப்பதும் தி.மு.க-தான். திடீரென்று மீனவர்மீது அக்கறை, டெல்டா விவசாயிகள்மீது அக்கறை என்று நாடகம் போடுகிறார்கள். சகித்துச் சகித்து பழகிவிட்டது எங்கள் மக்களுக்கு. தேச ஒற்றுமை பேசும் காங்கிரஸ், காவிரிப் பிரச்னையில் மட்டும் கர்நாடகாவில் பிரிவினை பேசுவது ஏன்… கர்நாடகா என்று வரும்போது மட்டும் காங்கிரஸ் மாநிலக் கட்சியாக மாறிவிடுகிறது. தண்ணி தர மறுக்கும் காங்கிரஸுக்கு முதல்வர் ஓட்டுக் கேட்டது எவ்வளவு கொடுமை. இப்போதுகூட முதல்வரை, ‘காவிரி நதிநீர்ப் பங்கீடு செய்யவில்லை என்றால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உங்களுக்குத் தொகுதிப் பங்கீடு இல்லை’ என்று சொல்லச் சொல்லுங்கள். தமிழர்களுக்கு எதிராக இருக்கும் காங்கிரஸைத் தட்டிக் கேட்காமல், கூட்டணி, கூட்டணி என்று கூடவே வைத்துக்கொண்டால், நாங்கள் உங்களுக்கு ஓட்டைப் போட வேண்டும், அப்படித்தானே… ஆனால், இதே சூழலில் ஜெயலலிதா இருந்து, காங்கிரஸோடு கூட்டணிவைக்கும் நிலைமை வந்திருந்தால், ‘தண்ணீர் தராத உன்னோடு என்ன கூட்டணி?’ என்று காங்கிரஸைப் புறந்தள்ளியிருப்பார். அந்த விஷயத்தில் அந்தம்மா கிரேட்.

இத்தகைய விவகாரங்களில் தி.மு.க-வை எதிர்த்தால், சங்கி என்கிறார்கள். எனக்கு ஐந்து வருடங்கள் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள். காவிரிப் பிரச்னை இருக்காது. 16 கிலோமீட்டரில் சோழர் வெட்டிய வீராணம் ஏரியைத் தூர்வாரினாலே, தஞ்சைக்குத் தண்ணீர் கொண்டு செல்ல முடியும். இதையெல்லாம் விட்டுவிட்டு, வளர்ச்சி என்ற போர்வையில் என்னென்னவோ செய்கிறார்கள். விளைநிலங்கள் உள்ள இடத்தில் ஏர்போர்ட் கட்டப் பார்க்கிறார்கள். ஏர்ப்போர்ட்டை எங்கு வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால், விளைநிலங்ளை உருவாக்க முடியாது. இதெல்லாம் புரியாமல் டெவெலப்மென்ட், டெவலெப்மென்ட் என்று குதித்து, சந்திரயான் நிலாவில் இறங்கிவிட்டது என்று சொல்கிறார்கள். நிலவில் மனிதரைக் குடியேற்றப்போகிறோம் என்கிறார்கள். முதலில் யாரைக் குடியேற்றுவீர்கள்… இந்துவையா, இஸ்லாமியரையா இல்லையென்றால் கிறிஸ்துவரையா…. முதலில் இந்திக்காரர்களை ஏற்றுவீர்களா இல்லை எங்களை ஏற்றுவீர்களா… நீங்கள் சந்திரயானில் மேலே போய்க்கொண்டிருக்கும்போது, எங்கள் ஆள் சாக்கடையைக் கையால் அள்ள கீழே போய்க்கொண்டிருக்கிறான்.

நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டிருக்கிறார், அவ்வளதுதான். அதில் சொல்வதற்கு வேறொன்றும் இல்லை. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். எங்களுடைய கொள்கை பிடித்து, எங்களோடு அவர் கூட்டணி வைத்தால், நாங்கள் வரவேற்போம். ஆனால், அவருக்கு நிரந்தரமாகக் கொள்கை இருக்க வேண்டும்.

அண்ணன் கமலிடம் கொள்கை இல்லை. அவர் இந்தியரா, திராவிடரா அல்லது தமிழரா என்பதை அவர் கடைசிவரைக்கும் விளக்கவே இல்லை. ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் இருப்பது நமக்குப் பெருமைதான். அவர் காலில் விழுந்தது, அவரின் தனிப்பட்ட விஷயம். இதனால், தக்காளி விலை குறைந்துவிடுமா… அடுத்தவர்களை மதிக்கும் மாண்பு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். செந்தில் பாலாஜி கைதாகியிருப்பதைப் பற்றி கேட்கிறீர்கள். தனிப்பட்ட முறையில் அவர் எனக்குத் தம்பி. ஜெயலலிதா ஆட்சியில் நடந்த குற்றம். அதை ஏன் யாரும் பேச மாட்டேன் என்கிறார்கள். தி.மு.க-கூடப் பேசவில்லை. அவரைப் பார்க்கக் கஷ்டமாக இருக்கிறது.

அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்காலத்தில் நடந்ததற்கு, இத்தனை காலம் கடந்து நடவடிக்கை எடுப்பது ஏன்… இத்தனை காலம் ஏன் காலதாமதப்படுத்தினீர்கள்… உங்களுக்குத் தேவையில்லாதபோது, நடவடிக்கை எடுப்பீர்கள். என்ன நியாயம் இது… இதே செந்தில் பாலாஜி அ.தி.மு.க-வில் இருந்தபோது, அவரை விமர்சனம் செய்து பேசினார் ஸ்டாலின். அப்புறம் ஏன் அவரைக் கட்சியில் சேர்த்தீர்கள்… இந்தக் கூட்டமே கொள்ளைக் கூட்டம். அவர்களை விட்டுத்தள்ளுங்கள். தனிப்பட்ட முறையில் செந்தில் பாலாஜி உள்ளே இருப்பது எனக்கு வருத்தத்தைத் தருகிறது” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ – தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை

Pagetamil

மருதங்கேணி பொலிஸாரால் சற்றுமுன் இரண்டு பெண்கள் கைது: மேலும் இருவருக்கு அழைப்பு

east tamil

ஆசிரியரின் ஆபாச பேச்சால் தற்கொலைக்கு முயன்ற 10ம் வகுப்பு மாணவி

east tamil

மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த மாணவர்கள் கேரளாவில் கொடூரம்

east tamil

“விமான நிலையம் வேண்டாம் என்று கூறவில்லை, ஆனால்” – பரந்தூரில் விஜய் பேசியது என்ன?

Pagetamil

Leave a Comment