“ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து, 7 முறை என் அனுமதியின்றி கருச்சிதைவு செய்து, என்னை தற்கொலைக்கு தூண்டிய சீமானை கைது செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நடிகை விஜயலட்சுமி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“2011இல் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகாரின் பேரில் பிரிவு 420 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கின் மேல் நடவடிக்கைக்காக நான் முயற்சித்தேன்.
அந்த புகாரில், 2008இல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் முன்பாக சீமானின் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் சீமானுக்கும் எனக்கும் மாலை மாற்றி திருமணம் நடைபெற்றது. ‘கிறிஸ்தவர் என்பதாலும் பெரியாரிஸ்ட் என்பதாலும் தாலி கட்ட மாட்டேன்’ என்றார்.
மேலும் ‘பிரபாகரன் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளும் வரை இதை வெளியில் கூற வேண்டாம்’ என்று தெரிவித்திருந்தார். என்னை திருமணம் செய்து கணவராக வாழ்ந்து 7 முறை என் சம்மதம் இன்றி கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்தார் சீமான். அதன் பின் என்னை ஏமாற்றிவிட்டு கயல்விழியை திருமணம் செய்து கொண்டார்.
நான் புகாரளித்ததும், அப்போது நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரான மறைந்த தடா சந்திரசேகர் மூலம் சீமான் ஒரு பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தையின்போது, என்னை ஊர் அறிய திருமணம் செய்துகொண்டு மனைவியாகவும், கயல்விழியை துணைவியாகவும் கொண்டு வாழ்கிறேன் என்று கூறியிருந்தார்.
அதை நம்பி, அந்த வழக்கில் மேல் நடவடிக்கை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்திருந்தேன். வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதி கொடுக்கவில்லை. ஆனால் சீமான் அவ்வாறு செய்யவில்லை.
எனவே, காவல் ஆணையரகத்தில் இன்று இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறேன். 2011ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசராணை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளேன். அதேபோல், தற்கொலை முயற்சி வழக்கு, இது தவிர புதிதாக புகார் ஒன்றையும் கொடுத்துள்ளேன்.
இந்த புகார்களை மீண்டும் மறு விசாரணை செய்ய வேண்டும் என தற்போது தமிழர் முன்னேற்ற படையின் ஒருங்கிணைப்பாளர் வீரலட்சுமியுடன் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்துள்ளோம். தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கையில்தான் எனது வாழ்வும் சாவும் உள்ளது.
சீமான் இன்று காலையில்கூட சொல்லியிருக்கிறார், அவர்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள் என்று.
இப்படிப்பட்ட தலைவர் ஒருவர், நாம் தமிழர் என்றொரு கட்சியை நடத்திவருகிறார் என்று நான் மிகவும் வருத்தப்படுகிறேன். எனக்கு இந்த விவகாரத்தை தனிப்பட்ட முறையில் எடுத்துச் செல்ல முடியவில்லை. இதில் எனக்கு முழு ஒத்துழைப்பை வீரலட்சுமி கொடுத்து வருகிறார். ஊடகங்களால்தான் நான் உயிருடன் இருக்கிறேன். வீரலட்சுமி போல, சீமானால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது எனக்கு உதவி செய்ய முடியும் என்றால், உங்களுடைய ஆதரவை எனக்கு தாருங்கள். 2011ஆம் ஆண்டே சீமானை கைது செய்ய வேண்டியது. ஹரி நாடார் கைது செய்யப்பட்டுள்ளார். சீமான் இன்னும் கைதாகவில்லை. எனவே, சீமானை கைது செய்ய வேண்டும் என்று மனுவில் கேட்டிருக்கிறேன்.
முன்னதாக, சீமான் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறியதைத் தொடர்ந்து, அந்த விவகாரத்தை பேசாமல் நிறுத்திவைத்திருந்தோம். இப்போது அவர் திருமணம் செய்யவில்லை. கேவலப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார். மதுரை செல்வம் மூலம் ஒரு கோடி ரூபாய் எனக்கு கொடுத்துள்ளதாக கூறுவது மிகப் பெரிய விஷயம். எனவே, அவரை கைது செய்யாமல் விட்டதுதான் பெரிய தவறு. என்னுடைய பிரச்சினையில் அதிமுக அரசு பெரிய அளவில் விசாரணை நடத்தவில்லை. என்னிடம் தான் காவல் துறையினர் விசாரணை நடத்தினார்களே தவிர, சீமானிடம் எதுவும் விசாரணை நடத்தவில்லை. ஈழத்துக்கு ஆதரவாக சீமான் பேசியதால், அதிமுக அவருக்கு ஆதரவளித்தது” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து அவரிடம் ‘11 ஆண்டுகளுக்குப் பின் இப்போது புகார் கொடுப்பதன் காரணம் என்ன?’ என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, அவரை அவதூராக ஒருமையில் பேசிய விஜயலட்சுமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.