காலி சிறைச்சாலையில் பதிவாகியிருந்த உயிர்க்கொல்லி மூளைக்காய்ச்சல் நோய் வெளி சமூகத்திற்கும் பரவியதா என்ற சந்தேகம், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நேற்று (26) இடம்பெற்ற சிசு மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையின் போது எழுந்துள்ளது.
காலி, தலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 8 மாத பெண் குழந்தை கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்றுமுன்தினம் (25) உயிரிழந்துள்ளது.
இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட காலி மாநகர மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லொக்குகே தெரிவிக்கையில், பாக்டீரியாவால் ஏற்படும் மெனிங்கோகோகல் நோயால் மரணம் ஏற்பட்டது என தீர்ப்பளித்தார்.
இந்த தொற்றினால் காலி சிறைச்சாலையில் இருவர் உயிரிழந்திருந்தனர்.
அத்துடன், பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரி யு.ஜி.பி. ஜயரத்ன, உயிரிழந்த சிறுமியின் சடலம் தொடர்பான இறுதிக் கிரியைகளை விரைவில் மேற்கொண்டு, அவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் கூடிய விரைவில் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட குடும்பத்தினரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு உயிரிழந்த சிறுமியின் உறவினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.




