பாணந்துறை நீதிமன்றின் களஞ்சியசாலைக்குள் புகுந்து 3 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் பொதிகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் பணிநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் அவரது நண்பரை கம்பளை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.
கைதான கான்ஸ்டபிள் கடந்த சனிக்கிழமை (19) அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளை அகற்றி நீதிமன்றத்தின் சான்று பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அறைக்குள் நுழைந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்கூரையில் இருந்து fளஞ்சிய அறைக்குள் கீழே இறங்கியபோது மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. எவ்வாறாயினும், அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடை அப்படியே பொருத்திய பின்னர் மூன்று போதைப்பொருள் பொதிகளுடன் கான்ஸ்டபிள் தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை (21) நீதிமன்ற ஊழியர்கள் பணிக்காக வந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்ததைக் கண்டுள்ளனர். அறையின் பொறுப்பதிகாரி மேலதிகாரிகளுக்கு அறிவித்த போதும் திருட்டு நடந்ததாக யாரும் நம்பவில்லை.
சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டு போதைப்பொருள் கண்டுபிடிக்கப்படும் வரை, களஞ்சியசாலையை உடைத்து மூன்று போதைப்பொருள் பொதிகளை திருடர்கள் திருடிச் சென்றமை நீதிமன்ற ஊழியர்களுக்குத் தெரியாது.
மாத்தளை ஓவில்கந்த பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனைப் பிரதிநிதியான ஒருவர் அதிகளவான போதைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு கொள்வனவு செய்பவரைத் தேடுவதாக மத்திய மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்கவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கம்பளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
மாத்தளை ஓவில்கந்த பகுதியைச் சேர்ந்த லக்மால் புலத்வத்த என்ற 30 வயதுடைய விற்பனை பிரதிநிதியே புலனாய்வாளர்களால் முதலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை மாநகர சபையின் சிறுவர் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் 20 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடம் விசாரணை நடத்திய போது பணி இடைநிறுத்தப்பட்ட கான்ஸ்டபிள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி மாத்தளை ஓவில்கந்தவில் உள்ள அவரது வீட்டில் வைத்து 3.75 கிலோகிராம் ஹெரோயினுடன் பொலிசார் அவரை கைது செய்தனர். இந்த போதைப்பொருள் கைதான இருவராலும் நீதிமன்ற உற்பத்திப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பாணந்துறை நீதிமன்றக் களஞ்சியசாலையில் இருந்தே திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த கான்ஸ்டபிளும் அவரது நண்பரும் காரில் பாணந்துறைக்கு சென்று நீதிமன்றத்தின் பின்புறமுள்ள மதில் சுவரில் இருந்து குதித்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்து இந்த திருட்டைச் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கான்ஸ்டபிள் தனது பயிற்சியின் ஆரம்பத்திலிருந்து மொரந்துடுவ பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளார். இந்த பிசி நீதிமன்ற சார்ஜன்டுடன் பாணந்துறை நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அந்த சமயங்களில் வழக்கு தயாரிப்பு அறைக்குள் பதுங்கி செல்வதில் அவர் எப்போதும் ஆர்வம் காட்டி வந்ததாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் அவர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் உயர் பொலிஸ் அதிகாரிகள் அவரை மொரந்துடுவ நிலையத்தில் இருந்து ஜூலை 16 மீரிகம பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரி ஒருவரின் லொக்கரில் இருந்து பொருட்களை திருடும் போது அவர் பிடிபட்டார், அப்போது அவர் வைத்திருந்த அபின் கண்டுபிடிக்கப்பட்டது. நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் மாத்தளைக்கு சென்று இந்த திருட்டை திட்டமிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.