விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் மொழி, இனம், சாதி, மதம் வட்டத்தில் சிக்காமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் பதிவிட வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
விஜய் அரசியலுக்கு வருவார் என்று பேசப்பட்டு வரும் சூழலில் கடந்த சில மாதங்களாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அம்பேத்கர் பிறந்தநாளன்று அவர் சிலைக்கு, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ – மாணவிகளுக்கு நடிகர் விஜய், கல்வி உதவி தொகை வழங்கினார்.
இந்த நிலையுல், இன்று (ஆகஸ்ட் 26) சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் சமூக ஊடக பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. காலை 8.55 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலிருந்து தொகுதி வாரியாக ஏராளமான விஜய் மக்கள் இயக்க ஐடி விங் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது: 31 ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர் மன்றமாக தொடங்கி 15 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் இயக்கமாக மாறி பயணித்துக் கொண்டிருக்கிறோம். வரக்கூடிய காலங்களில் வேறு ஒரு பரிணாமத்தில் செயல்படக்கூடிய முன்னெடுப்புகளை செய்து வருகிறோம். அதற்காக பல அணிகளுக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறோம்.
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் மொழி, இனம், சாதி, மதம் வட்டத்தில் சிக்காமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் பதிவிட வேண்டும். மேலும் தரம் தாழ்ந்த கருத்துகளை பதிவிட கூடாது. நீங்கள் அளிக்கும் பதில்கள் கருத்தியல் சார்ந்ததாக இருக்க வேண்டும். தலைமை வெளியிடும் பதிவுகளுக்கான லைக் மற்றும் ஷேர் மில்லியனை தாண்ட வேண்டும். தலைமையின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர்களின் பதிவுகளை லைக் மற்றும் ஷேர் செய்யக் கூடாது” இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தினார்.