மட்டக்களப்பு மாவட்டத்தின் மேய்ச்சல்தரையான மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரை சர்ச்சை தொடர்பில் நேரடியாக பார்வையிட சென்ற தமிழ் மதகுருமார், ஊடகவியலாளர்கள் இன்று பௌத்த மதகுரு தலைமையிலான சிங்கள விவசாயிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட பின்னர் பொலிசாரின் தலையீட்டையடுத்து விடுவிக்கப்பட்டனர்.
சுமார் 5 மணித்தியாலங்கள் வரை அவர்கள் பௌத்த மதகுரு தலைமையிலான கும்பலால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனுமதிக்கப்படாத இடத்துக்குள் நுழைந்ததாக கிளம்பிய சர்ச்சையையடுத்தே, அவர்களை தொடர்ந்து பயணிக்க அனுமதிக்காமல் பௌத்த மதகுரு தலைமையிலானவர்கள் தடுத்து வைத்ததாக கூறினர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கால்நடை வளர்ப்பாளர்கள், மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரையையே பெரும்பாலும் நம்பியுள்ளனர். எனினும், கடந்த சில வருடங்களாக அந்த மேய்ச்சல்தரையின் ஒரு பகுதியில் சிங்களவர்கள் விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஒரு பகுதியில் விவசாயம் செய்ய அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்ட போதும், தற்போது சிங்கள விவசாயிகளின் அட்டூழியமே அங்கு தலைவிரித்தாடுகிறது.
தமிழர்களின் கால்நடைகளை காயப்படுத்தியும், கொன்றும் அட்டூழியம் புரிந்து வந்தனர்.
கால்நடை பண்ணையாளர்கள் அந்த பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு விடாமல் தடுப்பதற்காக இந்த கொடூரத்தை புரிந்தார்கள்.
கடந்த ஒரு வாரமாக, மேய்ச்சல் தரையின் மேலும் சில பகுதிகளில் காடழிப்பு நடந்து, விவசாய நிலங்களை சிங்களவர்கள் உருவாக்குகிறார்கள் என பண்ணையாளர்கள் குறிப்பிட்டு வந்தனர். அத்துடன், மேய்ச்சல் தரையிலிருந்து தமது கால்நடைகளை பிற இடங்களிற்கு கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில் மட்டக்களப்பில் இருந்து ஒரு குழு சென்றுள்ளது.
கத்தோலிக்க மதகுருக்கள் இருவர், சைவ மதகுரு ஒருவர், இஸ்லாமிய மதகுரு, பிரதேச செய்தியாளர்கள் மூன்று பேர் என 9 பேர் அங்கு சென்றுள்ளனர்.
அவர்கள் அந்த பகுதிக்குள் நுழைந்த போது சர்ச்சை உருவானது.
மயிலத்தமனை பிரதேசத்தில் தொடர் சர்ச்சை உருவானதையடுத்து, மகாவலி திணைக்களத்தினர் சோதனைச்சாவடியொன்றை அமைத்துள்ளனர். அந்த சோதனை சாவடியை கடக்க முற்பட்ட போதே சர்ச்சை உருவானது.
அவர்கள் பயணித்தது கத்தோலிக்க மத நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான வாகனத்தில். வாகனத்தில் முன்பகுதியில் கால்நடை வைத்தியர் என பெயர் பொறித்திருந்ததாக அந்த பகுதி சிங்களவர்கள் குற்றம்சாட்டினர். என்றாலும், சம்பவம் தொடர்பான புகைப்பட, வீடியோ காட்சிகளில் அவ்வாறான பெயர் பலகையெதுவும் தென்படவில்லை.
மகாவலி திணைக்களத்தினருக்கும், வாகனத்தில் சென்ற குழுவினருக்குமிடையில் சர்ச்சை உருவானதையடுத்து, அந்த பகுதியில் அமைக்கப்பட்டு வரும் விகாரையிலுள்ள பிக்கு, சிங்கள மக்கள் வாகனத்தை சூழ்ந்துள்ளனர்.
மகாவலி திணைக்களத்தினர் அந்த பகுதி சோதனையை மேற்கொள்கிறார்கள் என்றால், நிலைமையை சிங்களவர்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க எப்படி அனுமதித்தார்கள்?, சிங்கள குடியேற்றத்துக்கான பாதுகாப்பை மகாவலி திணைக்களம் வழங்குகிறதா என்ற கேள்வியெழுகிறது.
அந்த பிராந்தியத்திற்கே பிக்குதான் உரிமையாளர் போல நடந்து கொள்ளும் காணொளிகள் வெளியாகியுள்ளன.
கிறிஸ்தவ மதகுருவொருவருக்கும் பிக்குவிற்கும் நடக்கும் சம்பாசணையில், தண்ணீர்ப்பிரச்சினை பார்க்க வருவதாகவும், புரஜெக்ட் செய்ய வந்ததகவும் தெரிவித்தார்.
ஒரு சிங்களவர், வாகனத்தில் வந்தவர்கள் வீடியோ எடுத்துக் கொண்டு வந்ததை கண்டதாக தெரிவிக்கிறார்.
இதை வெளிநாட்டுக்கு அனுப்பி பணம் வாங்குகிறீர்களா என பிக்கு எகிறுகிறார்.
அத்துடன், பிரபாகரனின் இரண்டாவது தளபதியாலேயே (கருணாவாக இருக்கலாம்) தம்மை அங்கிருந்து அகற்ற முடியவில்லையென்றும், உங்களால் ஒன்றும் செய்ய முடியாதென்றும், உங்களிடம் புலம்பெயர் தமிழர்களின் பணம்தான் உள்ளதென்றும், தன்னிடம் பணமும் உள்ளது, மக்களின் ஆதரவும் உள்ளதென உளறிக்கொட்டினார்.
இதேவேளை, அந்த பகுதியில் புதிதாக பௌத்த விகாரையொன்றும் கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்குள் விகாரை கட்டப்பட்டதாக மக்கள் குறிப்பிடுகிறார்கள்.
இது தொடர்பில் தமிழ் அரசியல் பிரமுகர்களிற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
கோவிந்தன் கருணாகரம், இரா.சாணக்கியன், சாள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்டவர்கள் பிராந்திய பொலிஸ் அதிகாரிகள், ஆளுனர் உள்ளிட்டவர்களுடன் பேசினர்.
இதையடுத்து, கரடியனாறு மற்றும் பொலன்னறுவை அரகலன்வில்ல பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அந்த பகுதியில் வைத்தே, வாகனத்தில் வந்தவர்களிடம் சுருக்கமாக வாக்குமூலம் பெற்று, நிலைமை தணித்து, அவர்களை அனுப்பி வைத்தனர்.
சுமார் 5 மணித்தியாலங்களின் பின்னர், அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.
மகாவலி திணைக்களத்தின் அனுசரணையுடன் தமிழர் நிலங்கள் எப்படி அகபகரிக்கப்படுகிறது என்பதற்கு மற்றொரு சான்றாக இந்த சம்பவமும் அமைந்துள்ளது.