உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் அவதிப்பட்டு வந்த தனது மனைவிக்கு தவறுதலாக புற்றுநோய்க்கான மாத்திரை வழங்கப்பட்டதன் காரணமாகவே உயிரிழந்ததாக ஒருவர் முறைப்பாடு செய்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்கிரிய, உறுகல பகுதியைச் சேர்ந்த பி.எம்.சோமாவதி என்ற 62 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் டபிள்யூ.லீலாரத்ன, தனது மனைவியின் நோயறிதல் புத்தகத்தை ஜூலை 31 ஆம் திகதி ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாகவும், அவருக்கு தேவையான மருந்துகளை வைத்தியர் நோயறிதல் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நோயறிதல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மருந்துகளும் வைத்தியசாலையில் கிடைக்காத காரணத்தினால், இங்கிரிய நகரில் உள்ள மருந்துக் கடையொன்றில் இருந்து கொள்வனவு செய்துள்ளார்.
சுமார் ஒரு வாரம் மருந்தை உட்கொண்ட பிறகு, இறந்த பெண்ணுக்கு எழுந்திருப்பதில் சிரமம், உடல் வலி, கவனக்குறைவு, சிறுநீர் கழித்தல் குறைதல், கால் மற்றும் வாயில் கொப்புளங்கள் போன்ற பல சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால் அவர் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுமார் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே, அவரை அம்பியூலன்ஸ் மூலம் ஹொரண ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஹொரணை வைத்தியசாலையின் 8ஆம் வார்டில் அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது, தாதி ஒருவர் அவர் உட்கொண்ட மருந்துகளை பரிசோதித்து, அவர் உட்கொண்ட மருந்துகளில் ஒன்று (மெத்தோட்ரெக்ஸேட்) புற்றுநோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுவதாக தெரிவித்தார்.
புற்றுநோயாளிகளுக்கு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே அந்த மருந்து வழங்கப்படுவதாகவும், ஆனால் உயிரிழந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட அந்த மருந்து அடங்கிய பாக்கெட்டில் உள்ள குறிப்புகள் நோயாளியை தினமும் உட்கொள்ள அறிவுறுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், ஆட்டோ இம்யூன் நோய் உள்ளவர்களுக்கும் அவர்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க மருந்து கொடுக்கப்படுகிறது என்பது தெரியவந்தது.
கடந்த ஓகஸ்ட் 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதி காலை வரை 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த போதிலும், உடல்நிலையில் முன்னேற்றம் இன்றி சனிக்கிழமை (19) காலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கணவரான டபிள்யூ.லீலாரத்ன, இங்கிரிய நகரில் உள்ள மருந்தகம் மூலம் நோயறிதல் புத்தகம் மற்றும் மருந்துகளுடன் இங்கிரிய பொலிஸாரிடம் வந்து கவனயீனம் குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.
மரணம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்பட உள்ளது.