யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை, கலிகை பகுதியில் நேற்று (20) அதிகாலை மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்திருந்தனர்.
உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் மதுபோதையில் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. அவர்கள் இருவரும் நள்ளிரவில் மதுபானம் வாங்க சென்றபோதே விபத்தில் சிக்கியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற இருவரும், வளைவொன்றில் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் எதிர்ப்பக்கமிருந்த பள்ளத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
அதிகாலை 1.20 மணியளவில் விபத்து நடந்தது.
இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.
மன்னாரை சேர்ந்த செல்வநாயகம் வென்சன் (31), புதிய சந்தை, வதிரி என்ற முகவரியை சேர்ந்த விஜயபாரத் நிசாந்தன் (28) ஆகிய இளைஞர்களே உயிரிழந்தனர்.
உயிரிழந்த வென்சன் மன்னாரை சேர்ந்தவர். யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிகிறார். நிசாந்தன், நெல்லியடி, வதிரிச்சந்தியில் மரக்கறி கடையொன்றை நடத்தி வருகிறார்.
அவரது கடைக்கு எதிராக உள்ள- உறவினர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அவரது இறுதிச்சடங்கு நடக்கவிருந்தது. உயிரிழந்த இளைஞர்களும், நண்பர்களும் இரவு முழுவதும் இறுதிச்சடங்கிலேயே நின்றுள்ளனர்.
இளைஞர்கள் கூட்டமாக நின்றதால் புகைப்பதற்கு சிகரெட் தேவைப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரமென்பதால், துன்னாலை பகுதியிலுள்ள அறிமுகமான கடையொன்றில் சிகரெட் வாங்கலாமென இருவரும் சென்றதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை நேற்று தமிழ்பக்கமும் குறிப்பிட்டது. என்றாலும், பொலிஸ் விசாரணையில், நண்பர்கள் தெரிவித்தது பொய்யான தகவல் என்பதும், உயிரிழந்தவர்கள் மதுபானம் வாங்குவதற்காக சென்றபோதே விபத்தில் சிக்கினார்கள் என்பதும் தெரிய வந்தது.
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் முன்பான உணவகத்தில் பணியாற்றும் வென்சனுக்கு அந்த பாதை அவ்வளவு பரிச்சயமற்றது. அவரே மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றுள்ளார். வீதியின் ஆபத்தான வளைவில் போதையில், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
உயிரிழந்த இருவரும் மதுபோதையிலிருந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. நேற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நடந்த பிரேத பரிசோதனையில், இது தெரிய வந்துள்ளது.
நள்ளிரவிற்கு பின்னர் அவர்கள் சிகரெட் வாங்க சென்றதாக நண்பர்கள் குறிப்பிட்டிருந்தாலும், அவர்கள் மதுபானம் வாங்க சென்றது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.
3 இளைஞர்களை பலியெடுத்த சொர்ணாக்கா
மரணச்சடங்கில் கலந்து கொண்டிருந்த இளைஞர்கள் மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ளனர். மதுபானம் அருந்திக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் மதுபானம் தீர்ந்து விட்டதால், கலிகை சந்தியில் உள்ள கடையொன்றில் மதுபானம் வாங்க சென்றுள்ளனர்.
அந்த பிராந்தியத்திலேயே நள்ளிரவு நேரத்தில் மதுபானம் வாங்கக்கூடிய இடம் கலிகை சந்தியில் இருந்தது.
கலிகை சந்தியில் பெண்ணொருவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். அங்கு சட்டவிரோதமாக அரச சாராயமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மிக நீண்டகாலமாக இந்த சட்டவிரோத வியாபாரம் நடக்கிறது. மதுபான கடைகள் இரவு 10 மணிக்கு பூட்டப்பட்டு விடும். நடுஇரவு வரை தொடர் மதுபான விருந்தில் கலந்து கொள்ளும் இளைஞர்களை குறிவைத்து இந்த பெண் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். நெல்லியடி, பருத்தித்துறை, கரவெட்டி, வரணி பகுதிகளை அண்டிய பகுதிகளில் நள்ளிரவு விருந்துகளில் மதுபானம் முடிந்து விட்டால், அந்த பெண்ணிடமே செல்கிறார்கள். அவர் 24×7 சேவை வழங்குபவர். குறிப்பாக, நள்ளிரவு வாடிக்கையாளர்களிற்காகவே காத்திருப்பவர்.
அவர் மீது பொலிசார் 2,3 வழக்குகளை தொடர்ந்துள்ளனர். என்றாலும், பொலிசாரின் நடவடிக்கை போதுமானதாக இல்லையென்பது அந்த பகுதி மக்களின் கருத்து. எத்தனை வழங்குகள் என்றாலும், அந்த விற்பனையை நிறுத்தாமல் தொடர்கிறார்.
அவரிடம் நள்ளிரவில் மதுபானம் வாங்கி பருகிய, வாங்க சென்றபோதுவிபத்துக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 3 ஆகியுள்ளது.
ஏற்கெனவே சில மாதங்களின் முன் நள்ளிரவில் அவரிடம் மதுபானம் வாங்கி பருகிய பின்னர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து, மின்கம்பத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்திருந்தார். வரணியில் இந்த சம்பவம் நடந்தது.
உயிரிழந்தவர் சட்டம், ஒழுங்குடன் தொடர்புடைய துறையில் பணியாற்றுபவர் என்பதுதான் இதிலுள்ள கசப்பான விவகாரம்.
தற்போது, அவரிடம் மதுபானம் வாங்க சென்றபோது, விபத்திற்குள்ளாகி 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
நள்ளிரவில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யும் பெண் பற்றிய தகவல்கள் பகிரங்கமாக உள்ளதால், பொலிசார் கிடுக்குப்பிடி நடவடிக்கையெடுத்து இந்த சட்டவிரோத விற்பனையை தடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.