‘தமிழ் மக்களுக்கு தேவை விடுதலையே தவிர சீனியோ, சக்கரையோ அல்ல’: ரெலோ தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் விந்தன் கனகரட்ணம்!

Date:

தமிழ் மக்களின் வழிபாட்டு, வாழிடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. தமிழர்களின் தலையை வெட்ட வாளுடன் வருவதாக மேர்வின் சில்வா கூறுகிறார். நாங்கள் மக்களுக்காக போராட வந்த இலட்சியத்தின் ஒரு துளியைக்கூட இன்னும் பெறவில்லை. மக்களின் விடுதலையே எமது கொள்கையாக இருக்க வேண்டும். சீனியோ, சக்கரையோ இப்பொழுது எமக்கு தேவையில்லையென காட்டமாக தெரிவித்துள்ளார் ரெலோ அமைப்பின் பிரமுகர் விந்தன் கனகரட்ணம்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செல்வம் அடைக்கலநாதன் கோரித்தான் வவுனியா சீனி தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க கிட்டத்தட்ட ஐந்து லட்சம் மக்களின் முன்பாக மடு தேவாலயத்தில் தெரிவித்துள்ளார்.

நான் 39 வருடங்களாக ரெலோ அமைப்பில் இருக்கிறேன். தலைவர் ஸ்ரீ சபாரட்ணம் தலைமையில் இந்த நாட்டுக்காக எனது உயிரை, உடலை, அர்ப்பணிப்பை அர்ப்பணித்து போராட புறப்பட்டிருந்தேன். பின்னர் ஜனநாயக வழியில் போராட தள்ளப்பட்டுள்ளோம். எமது போராட்ட வடிவம் மாறினாலும், எமது இலக்கு தமிழீழம் என்பதிலிருந்து மாற்றமடைந்திருந்தாலும், வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம்.

கைத்தொழில், மீன்பிடி, தொழிற்துறை அமைச்சராக ஜி.ஜி.பொன்னம்பலம் செயற்பட்டிருந்தார். அகில இலங்கை தமிழ் காங்கிரசிலிருந்த அவர் அரசாங்கத்தில் இணைந்து விட்டார் என தந்தை செல்வா சுயாட்சி கோரிக்கையுடன் தமிழ் அரசு கட்சியை ஆரம்பித்தார்.

ஆனால் அன்று ஜி.ஜி பொன்னம்பலம் கொண்டு வந்த சீமெந்து தொழிற்சாலை எப்படியிருக்கிறது? கந்தளாய் சீனித்தொழிற்சாலை எப்படியிருக்கிறது? சீனித்தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதுடன், முழுவதும் தமிழ் மக்கள் வாழ்ந்த அந்த பகுதி சிங்கள பகுதியாகிவிட்டது. வாழைச்சேனை காகித தொழிற்சாலைக்கு என்ன நடந்தது? ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலைக்கு என்ன நடந்தது?

பரந்தன் இரசாய கூட்டுத்தாபனம் இங்குகிறதா? ஆனையிறவு உப்புக்கூட்டுத்தாபனம் இயங்குகிறதா? அல்லைப்பிட்டி அலுமினிய தொழிற்சாலை இயங்குகிறதா?, மண்டைதீவு மீன் தூள் ஆலை இயங்குகிறதா?

ஒரு சலுகை அடிப்படையில் அமைச்சராகினார். இப்பொழுது அனைத்து தொழிற்சாலைகளும் அழிந்து கிடக்கின்றன.

எமக்கு நிரந்தர தீர்வு கிடைக்காமல் அபிவிருத்தியென்பது நிலைத்து நிற்குமா என்ற கேள்வி அனைவரிடமும் உள்ளது.

இன்று கோயில்களை தக்க வைக்க போராடுகிறோம். குருந்தூர் மலை, வெடுக்கநாறி மலை, கன்னியா வெந்நீர் ஊற்று, தையிட்டி, பறாளாய் முருகன் கோயில், மண்டைதீவில் கடற்படை ஆக்கிரமிப்பு என பாதுகாப்பு தரப்பின் உதவியுடன் பிக்குகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் எமக்கு ஒரு தீர்வு வரவில்லை. என்ன கொள்கைக்காக, இலட்சியத்துக்காக புறப்பட்டோமோ அதில் ஒரு துளியை கூட அடையவில்லை. ஏற்கெனவே கொண்டு வந்த தொழிற்சாலைகள் அழிந்து, இரும்பு திருட்டு நடந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் நிரந்தர தீர்வில்லாமல் அபிவிருத்தி, முதலீடு எந்த வகையில் எமக்கு சாத்தியப்படும். இப்பொழுது எமக்கு தேவை சீனியோ, சக்கரையோ அல்ல. எமக்கு தேவை விடுதலை.

மேர்வின் சில்வா வாளுடன் வருவதற்கு தயாராகிறார். அவருக்கு பாதுகாப்பு கொடுக்க பாதுகாப்பு தரப்பு தயாராக இருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் ரணிலிடம் போய் சீனி கேட்பது சரியல்ல. அதல்ல எமது பிரச்சினை. காணாமல் போனவர்களிற்கு, அரசியல் கைதிகளுக்கு தீர்வில்லாமல் உள்ளது. நாளாந்தம் சிங்கள குடியேற்றம் நடக்கிறது. இவைதான் எமது பிரச்சினை. எமது கொள்கை தவறாமல் பயணிக்க வேண்டும். 3 இலட்சம் மக்களை பலி கொடுத்துள்ளோம். 50 ஆயிரம் போராளிகளை மண்ணுக்குள் விதைத்துள்ளோம்.

சரி பிழைகளுக்கு அப்பால் மக்களின் விடுதலைக்காக எம்மை உருக்கிக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஐ.நா தீர்மானங்களுக்கு அரசு அடிபணியவில்லை. இந்த நிலையில் எமக்கு சீனியா முக்கியம். எமது விடுதலையே முக்கியம்.

இனப்பிரச்சினை தீர்ந்த, எம்மை நாமே ஆளும் போது ஏராளம் தொழிற்சாலைகள் தானாக வரும். புலம்பெயர் தமிழர்கள் தாராளமாக முதலிடுவார்கள்.

கடந்த 2 மாதங்களாக சீனித்தொழிற்சாலை பற்றியே பேச்சாக உள்ளது. எமது 39 வருட போராட்ட வாழ்க்கையில் எமது கட்சிக்கு கிடைத்த பெரும் அவமானமாக இந்த காலப்பகுதியை பார்க்கிறேன். ஊடகங்கள் இதுவரை எழுதியதெல்லாம் நேற்று மெய்யாகி விட்டது. ஊடகங்கள் பொய் சொல்கின்றன என்ற கருத்தும் இருந்தது. ஆனால் நேற்று அனைத்தும் உண்மையாகி விட்டது.

தனிநாடு கேட்டோம், சுயாட்சி கேட்டோம்… இப்பொழுது சீனி தொழிற்சாலையா கேட்கிறோம். இதுவா எமது பிரச்சினை.

ஊடகங்களில் இந்த விவகாரம் வந்தபோது உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தோம். ஏனெனில், இது எமது கட்சி. தலைவர் சிறிசபாரத்தினம் எங்களை நம்பி விட்டுவிட்டு சென்ற கட்சி. எமக்கு கடமை, பொறுப்பு உணர்வுள்ளது. எமக்கும் தன்மானமுள்ளது. தலைவர்கள் குட்டிமணி, தங்கத்துரை உருவாக்கிய கட்சி. தலைவர் பிரபாகரனும் எம்முடன்தான் இருந்தார். தலைவர்கள் என்ன கொள்கைக்காக மரித்தார்களோ, அதை நாம் கைவிட முடியாது. அற்ப சொற்ப சலுகைகளுக்காக அரசிடம் கையேந்த முடியாது.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நல்லாட்சியில் விழுந்து விழுந்து ரணிலை காப்பாற்றினார்கள். நீதிமன்றமும் சென்றார்கள். ஆனால் அரசியல் கைதிகள் நிரந்தரமாக விடுவிக்கப்படவில்லை. பிள்ளைகளை தேடும் தாய்மாரிற்கு பதில் கிடைக்கவில்லை.

சீனி தொழிற்சாலை தெடர்பாக பத்திரிகையில்தான் பார்த்து தெரிந்து கொண்டேன். உடனே வவுனியா மாவட்ட கட்சி அமைப்பாளர், முக்கியஸ்தர்களை தொடர்பு கொண்டு கேட்டேன். அவர்கள் யாருக்கும் இதைப்பற்றி தெரிந்திருக்கவில்லை. முதலாவது கட்சியின் வவுனியா கிளைக்கு அதைப்பற்றி தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அடுத்ததாக வவுனிய பொது அமைப்புக்கள், விவசாய அமைப்புக்கள், மக்களை சந்தித்து இதைப்பற்றியெல்லாம் பேசியிருக்க வேண்டும். நீர், நிலம், காட்டுக்கு ஆபத்தில்லாமல் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தலாமா என ஆராய வேண்டும். அனைத்தும் நடந்தால் கட்சியின் தலைமைக்குழுவில் சமர்ப்பித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இதுவரை அப்படி நடக்கவில்லை.

2016ஆம் ஆண்டு செல்வம் அடைக்கலநாதன் இந்த திட்டத்தை முன்வைத்தபோது அப்போதைய வடக்கு மாகாணசபையினால் நிராகரிப்பட்டது. சுற்றாடல் காரணங்களினால் அது நிராகரிக்கப்பட்டது.

அமைச்சரவையில் 4 முறை அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர்தான் இந்த திட்டத்தின் பின்னணியில் ரெலோ உள்ளதை அறிந்தோம். இந்த விடயம் பற்றி ரெலோவின் செயலாளர் ஜனா, உபதலைவர்கள் ஹென்ரி மகேந்திரன், இந்திரகுமார் பிரசன்னா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்திற்கும் கூட இந்த விவகாரம் தெரியாது. எனக்கும் தெரியாது. இதை நாம் கட்சிக்குள் இதை ஒரு விடயமாக எடுத்தோம்.

தமிழ் அரசு கட்சி, புளொட் கட்சியின் பிரமுகர்கள், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஜனநாயக பேராளிகள் கட்சியென்பன அதை எதிர்த்தன. இந்த திட்டம் பற்றி கட்சிக்குள்ளும், பங்காளிக்கட்சிகளுக்கும் தெரிந்திருக்கவில்லை.

இந்த திட்டம் நிறைவேறுமா என்ற சந்தேகமும் உள்ளது. அடைக்கலநாதன் கேட்ட திட்டத்தை அங்கீகரித்துள்ளதாக ஜனாதிபதி நேற்று பேசினார். அமைக்கலநாதன் இதுவரை அப்படி சொல்லவில்லை. யாரோ கொண்டு வந்த திட்டத்தை தாம் ஆதரித்ததாகவே கூறினார். யாரும் இதில் குத்திமுறியத் தேவையில்லை, இது மக்களுக்கு தேவையில்லையென்றால் கைவிடுவோம் என்றார். மக்கள் இந்த திட்டத்தை கைவிட்டு விட்டார்கள். அதற்கு காரணம், திட்டத்தின் ஆரம்பம் பிழையாக அமைந்தது. இதனால் மக்களிற்கு சந்தேகம் எழுந்தது.

இந்த விவகாரத்தில் பல கோடி ரூபா தரகுப்பணம், கையூட்டு பரிமாறப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. இதனால் மக்களிடம் எதிர்ப்பு வலுத்தது. இவர்களின் பிழையான அணுகுமுறைதான் திட்டத்திற்கு எதிர்ப்பு ஏற்பட காரணம்.

சீனித்தொழிற்சாலை திட்டத்துக்கு துறைமுக நகர திட்டத்திற்கு ஈடான பணம் முதலிடப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. தாய்லாந்து அவ்வளவு பணம் செலவழிக்குமா என்பது சந்தேகம். இது சீனாவின் திட்டமென்கிறார்கள். இதற்கான விளக்கத்தை ஏற்பாட்டாளர்கள்தான் கொடுக்க வேண்டும்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு ஆரையம்பதியில் மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த இருவர் வாள்களுடன் கைது

மட்டு ஆரையம்பதி வம்மிக்கேணி  மாரியம்மன் கோவில் முன்றலில்  கடந்த மாதம் மட்டக்களப்பு...

பைத்தியக்கார ஈரானை கடுமையாக தாக்குவோம்!

ஹோர்முஸ் ஜலசந்தியில் தெஹ்ரான் தொடர்ந்து கப்பல்களைத் தாக்கினால், ஈரான் மீதான அமெரிக்காவின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்