தெற்கு ரஷ்ய பிராந்தியமான தாகெஸ்தானில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஏற்பட்ட தீ மற்றும் வெடிப்பில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர் என்று பிராந்திய அவசரகால மருத்துவர்களை மேற்கோள் காட்டி Interfax செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை இரவு காஸ்பியன் கடலோரம் அமைந்துள்ள தாகெஸ்தானி தலைநகர் மகச்சலாவில் நெடுஞ்சாலையின் சாலையோரத்தில் உள்ள கார் பழுதுபார்க்கும் கடையில் தீ தொடங்கியது. பின்னர் அருகிலுள்ள பெட்ரோல் நிலையத்திற்கு பரவியது என்று அதிகாரிகள் செவ்வாயன்று முன்னதாக தெரிவித்தனர்.
“இது ஒரு போர் போன்றது” என்று ஒரு சாட்சி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்தது, அவர்களில் 10 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று ரஷ்ய துணை சுகாதார அமைச்சர் விளாடிமிர் பிசென்கோவை மேற்கோள் காட்டி RIA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் 13 பேர் குழந்தைகள் என்று தாகெஸ்தானி சுகாதார அமைச்சகத்தை மேற்கோள்காட்டி Interfax தெரிவித்துள்ளது.
பலத்த காயமடைந்தவர்களை மொஸ்கோவிற்கு வெளியேற்றுவதற்காக விமானம் ஒன்று மகச்சலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று ரஷ்யாவின் அவசரகால சூழ்நிலைகள் அமைச்சகம் டெலிகிராம் செய்தியிடல் செயலியில் தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்பு திங்கள்கிழமை இரவு 9:40 மணிக்கு (18:40 GMT) நடந்ததாக தாகெஸ்தான் நிர்வாகத்தின் தலைவர் செர்ஜி மெலிகோவ் டெலிகிராமில் தெரிவித்தார்.
“வெடிப்புக்கான காரணங்கள் மற்றும் வகை தெளிவுபடுத்தப்பட்டு வருகிறது,” என்று அவர் கூறினார்.
ரஷ்ய நாளிதழான இஸ்வெஸ்டியாவின் டெலிகிராமில் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு சாட்சி, கார்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் தீப்பிடித்து பெட்ரோல் நிலையத்திற்கு பரவியதாகக் கூறினார்.
“வெடிப்புக்குப் பிறகு, அனைத்தும் எங்கள் தலையில் விழுந்தன, எங்களால் எதையும் பார்க்க முடியவில்லை,” என்று பெயரிடப்படாத சாட்சி மேற்கோள் காட்டப்பட்டது.
RIA செய்தி நிறுவனத்தால் டெலிகிராமில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ, ஒரு கட்டிடத்தில் இருந்து தீப்பிழம்புகள் எழுவதையும், அதைத் தொடர்ந்து ஒரு பெரிய வெடிப்பையும் காட்டியது.
சுமார் 600 சதுர மீட்டர் (6,450 சதுர அடி) பரப்பளவில் தீ பரவியதாக அமைச்சகம் கூறியது, 260 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக எடுத்ததாக ரஷ்ய அவசர சேவையின் அறிக்கையை மேற்கோள் காட்டி TASS மாநில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் எண்ணெய் வளம் மிக்க மேற்கு சைபீரியாவின் Khanty-Mansiisk (Yugra) பகுதியில் உள்ள Talinskoye எண்ணெய் வயல் வெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று RIA திங்களன்று தெரிவித்துள்ளது.
RIA படி, 100 சதுர மீட்டர் பரப்பளவில் தீ விபத்து ஏற்பட்டது. வெடிப்பு எப்படி ஏற்பட்டது என்பது முதலில் தெரியவில்லை.