நைஜரின் ஆட்சிக்கவிழ்ப்புத் தலைவரைச் சந்தித்த நைஜீரிய இஸ்லாமிய அறிஞர்கள் குழு, மேற்கு ஆபிரிக்கத் தலைவர்களுடன் நேரடிப் பேச்சுக்களை நடத்தவும், மோதலைத் தீர்க்கவும் ஜெனரல் ஒப்புக்கொண்டதாகக் கூறியுள்ளனர்.
நைஜீரியத் தூதுக்குழுவை வழிநடத்திய ஷேக் அப்துல்லாஹி பாலா லாவ், ஞாயிற்றுக்கிழமை, நைஜீரிய தலைநகர் நியாமியில் ஜெனரல் அப்துரஹமானே டிசியானியுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஒரு நாள் கழித்து, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (ECOWAS) நைஜரில் சிவிலியன் ஆட்சியை மீட்டெடுப்பதற்கான அதன் விருப்பங்களை- இராணுவ தலையீடு உட்பட- ஆராய்ந்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடந்தது.
கடந்த மாதம் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, நைஜரில் இராணுவ ஆட்சி நடந்து வருகிறது.
மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் மூன்றுஆண்டுகளில் 7வது சதிப்புரட்சி இது.
டிசியானி “ECOWAS இன் தலைவர்களுடன் முழுமையாக நேரடி விவாதங்களை நடத்த ஒப்புக்கொண்டார்” என்று ஷேக் அப்துல்லாஹி பாலா லாவ் கூறினார்.
“எனவே, அவர்கள் சந்திக்க ஒரு இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்,” என்று அவர் கூறினார். “அவர்கள் நைஜரிலோ, நைஜீரியாவிலோ அல்லது வேறு எங்கு தங்களுக்கு நல்லது என்று நினைக்கிறார்கள்?”
வரும் நாட்களில் நேரம் நிர்ணயம் செய்யப்படலாம், என்றார்.
“நைஜரில் உள்ள இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பின் தலைவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்காக ECOWAS தலைவர்களுடன் ஒரு உரையாடலை நடத்தும் ஒரு வழியை நாங்கள் உருவாக்க விரும்புகிறோம், இதனால் எங்கள் பிராந்தியத்தில் அமைதி தொடர்ந்து இருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.
ECOWAS தலைவரும் நைஜீரிய ஜனாதிபதியுமான போலா டினுபுவின் அங்கீகாரத்துடன், ஷேக் அப்துல்லாஹி பாலா லாவ் தலைமையிலான குழுவினர் பயணம் செய்தனர்.
லாவின் கூற்றுப்படி, டிசியானி உடனான குழுவின் சந்திப்பு பல மணி நேரம் நீடித்தது.
அவர்களின் பேச்சுக்களின் போது, நைஜர் மற்றும் நைஜீரியா இடையேயான வரலாற்று உறவுகளை டிசியானி வலியுறுத்தினார், அந்த நாடுகள் “அண்டை நாடுகள் மட்டுமல்ல, சகோதர சகோதரிகளும் பிரச்சினைகளை இணக்கமாக தீர்க்க வேண்டும்” என்று கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜரில் ஜூலை 26 ஆட்சிக்கவிழ்ப்பு பல மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு பெரிய அடியாகக் கருதப்படுகிறது. நைஜரை சஹேல் பிராந்தியத்தில் ஒரு பங்காளியாகக் கருதி பெருமளவு பணத்தை உதவியாக வழங்கியுள்ளன. அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎல் (ஐஎஸ்ஐஎஸ்) ஆகியவற்றுடன் தொடர்புடைய குழுக்களின் வளர்ந்து வரும் எழுச்சியை முறியடிக்க நைஜர் முக்கியத்துவம் மிக்க பிராந்தியம்.
அமெரிக்காவும் பிரான்சும் பிராந்தியத்தில் 2,500 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களைக் கொண்டுள்ளன. நைஜரின் கனியவளம் மேற்கு நாடுகளுக்கு தேவையாக உள்ளது. நைஜர் சதிப்புரட்சியின் பின்னால் ரஸ்யா இருப்பதாக மேற்கு நாடுகள் சந்தேகிக்கின்றன.