மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தின் போது ஆபத்தான விதத்தில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை எச்சரித்த மூன்று பிள்ளைகளின் தந்தையை இளைஞர்கள் குழு கைகளாலும் ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
நேற்று (09) பிற்பகல் வாதுவ வெரகம கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தல்பிட்டிய, வாதுவ பகுதியைச் சேர்ந்த, கடந்த 07ஆம் திகதி பிற்பகல் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த 19 வயதுடைய துலாஞ்ச ஹேஷாமின் இறுதிக் கிரியைகள் நேற்று (09) பிற்பகல் வாத்துவ வெரகம பொது மயானத்தில் இடம்பெற்றன.
அங்கு இளைஞர்கள் குழு ஒன்று சுமார் முப்பது மோட்டார் சைக்கிள்களுடன் வந்து இறந்த இளைஞனுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதாக கூறி மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டனர். அதி வேகம், ஒற்றை சக்கரத்தில் பயணித்தல் உள்ளிட்ட ஆபத்தான விதமான சாகசங்களை நிகழ்த்தினர்.
இதனால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர். ஆனால் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஆனால் அங்கிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் கோபடைந்த இளைஞர்கள், அந்த நபரை சுற்றிவளைத்து கடுமையாக தாக்கினர். கை, கால்கள், ஹெல்மெட்டினால் அவர் தாக்கப்பட்டார். சுமார் 50 இளைஞர்கள் அவரை சுற்றிவளைத்து தாக்கினர். இதையடுத்து, கிராம மக்கள் ஒன்றுதிரண்டு, பலத்த பிரயத்தனத்தின் பின்னர் அவரை மீட்டெடுத்தனர்.
தாக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை உடலின் பல பாகங்களில் அடிபட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
வாதுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.