தமிழ் மக்களை அழித்தொழிக்கும் அரசியலை நிறுத்துங்கள்: சுரேஷ் எச்சரிக்கை

Date:

முன்னாள் சட்ட அமைச்சரும், வெளியுறவு அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அவர்கள் அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தம் அரசியல்யாப்பின் ஒரு அங்கம் என்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தை நாடவேண்டிய அவசியம் இல்லை என்றும் கடந்த 07.08.2023 திங்கட்கிழமை அன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது கூற்றுக்கு பதில் அளித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையிலேயே தமிழ் மக்களை அழித்தொழிக்கும் அரசியலைக் கைவிடுமாறு கோரியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு:

இலங்கை தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வென்பது இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே பிரச்சினைக்குரிய ஒரு விடயமாக மாற்றப்பட்டிருக்கிறது. சிங்களம் மாத்திரம் அரச கரும மொழி, வாகனங்களில் சிங்கள ஸ்ரீ, பல்கலைக்கழகங்களில் தரப்படுத்தல் என்று தொடங்கிய சிங்கள இனவாதமானது வளர்ச்சியடைந்து தமிழ் மக்களின் காணிகளைப் பறித்தெடுத்தல் அவர்களை விரட்டியடித்தல் அங்கு சிங்கள மக்களைக் குடியேற்றல் என்ற நிலைக்கு வளர்ச்சியடைந்து, இன்றும் புராதான இடங்கள் என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை சூறையாடுகின்ற வேலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இதற்கு எதிரான தமிழ் மக்களின் அறவழிப் போராட்டம் அரச பயங்கரவாதத்தால் ஒடுக்கப்பட்டதன் காரணமாக தமிழ் மக்களும் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஆயுதம் ஏந்த வேண்டியேற்பட்டது. மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த இந்த யுத்தத்தில், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களும் போராளிகளும் கொல்லப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். நாட்டின் பொருளாதாரம் என்பது மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. இன்று வாங்கிய கடன்களைக் கட்டமுடியாத அளவிற்கு இலங்கை பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருப்பதுடன், இலங்கையின் நாணயமும் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
இத்தகைய மோசமான நிலையிலும்கூட, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான ஒரு கௌரவமான தீர்வை எட்டுவதற்கு சிங்களத் தரப்பு தயாராக இல்லை என்பதையே அவர்களது நடவடிக்கை எடுத்துக்காட்டுகின்றது.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழ் சிங்கள தரப்புகளிடையில் ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டபோதும் அதனை சிங்கள தரப்பு ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்ததும், ஆயுதப்போராட்டம் நடந்த காலத்தில் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளும் அதனோடு பல்வேறுபட்ட தீர்வுத்திட்டங்கள் உருவாக்கப்பட்டபோதும் அவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படாமல் அவைகள் அனைத்தும் குப்பைக்கூடைக்குள் வீசப்பட்டதாகவே இருக்கின்றது.

சிங்கள பௌத்த மேலாதிக்க அரசுகளினால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் சமஷ்டிக்காக நீண்டகாலம் அறவழி போராட்டம் நடத்தி இயலாத பட்சத்தில் தனிநாடுகோரி போராடினார்கள். அதுவும் அடக்கி ஒடுக்கப்பட்டதன் காரணமாக மீண்டும் சமஷ்டி கோரிக்கை முன்னெழுந்தது. அதுவும் ஒரு நீண்டகால இழுபறியாக இருப்பதன் காரணத்தால் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினூடு உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமைகளை முழுமையாக அமுல்படுத்தும்படி தமிழ் மக்கள் கோரிவருகின்றனர். இந்தியாவும் அதனையே இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்துகின்றது.
ஆனால், பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில்கூட விருப்பமின்றி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, பாராளுமன்றத்திற்குப் போகவேண்டும் என்று கூறுவுதும் அங்கு பேசவேண்டும் இங்கு பேச வேண்டும் என்று கூறுவதும் அர்த்தமற்றதும் காலத்தை விரயமாக்கும் ஒரு செயற்பாடுமாகும்.

முன்னாள் சட்ட அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் அவர்கள் 13ஆவது திருத்தம் என்பது அரசியல் சாசனத்தில் ஒரு அங்கம் என்றும் ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மீண்டும் பாராளுமன்றம் போகவேண்டிய அவசியமில்லை என்று கூறியிருப்பதுடன், இவ்வாறு நடந்துகொள்ள முயற்சிப்பது உள்நோக்கம் கொண்டது என்றும் கூறியிருக்கின்றார். எதிர்க்கட்சியில் இருக்கும்பொழுது ஏதோ தமிழ் மக்களுக்குச் சாதகமாக இருப்பதுபோல் பேசுவதும் ஆளும் தரப்பிற்குப் போனவுடன் அவற்றை மறந்து செயற்படுவதும் முழு சிங்களத் தலைமைகளின் பழக்க தோசமாக இருக்கின்றது.

ஜனாதிபதி பிரேமதாச அவர்கள் மங்களமுனசிங்க அவர்கள் தலைமையில் ஒரு தீர்வுத்திட்டத்தை உருவாக்கினார். ஆனால் அதனை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடித்தார். அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக அவர்கள் ஒரு தீர்வுத்திட்டத்தை உருவாக்கி அதனை நலிவடையச் செய்து, அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அங்கு ரணில் விக்கிரமசிங்க அந்த வரைபை தீயிட்டுக் கொளுத்த, சந்திரிகா பண்டாரநாயக அவர்கள் அதனையும் கிடப்பில் போட்டுவிட்டார். பின்னர் மகிந்த ராஜபக்ச அவர்கள் திஸ்ஸவிதாரன ஆணைக்குழு என்ற குழுவை உருவாக்கி அவர்கள் கொடுத்த பரிந்துரைகளையும் அவர் குப்பைக்கூடைக்குள் வீசிவிட்டார். பின்னர் மகிந்த ராஜபக்ச அவர்கள் தமிழ்த் தரப்புடன் பதினேழு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அதுவும் காலத்தை விரயம் செய்யும் நோக்கத்தைக் கொண்டதாக இருந்ததே தவிர, அங்கு எதுவும் நடைபெறவில்லை. பின்னர் ரணில்-மைத்திரி கூட்டு அரசாங்கத்தின்பொழுது ஒரு புதிய அரசியல் சாசனம் உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதுவும் கிடப்பில் போடப்பட்டது.

இறுதியாக இந்தியாவின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையை அமுல்படுத்துவதற்கான ஜே.ஆர். ஜெயவர்த்தனவால் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தத்தைக்கூட முழுமையாக அமுல்படுத்தத் தயாராக இல்லாத சூழ்நிலையை இன்று நாம் அவதானிக்கின்றோம். பிரதமர்கள், ஜனாதிபதிகள், ஆளும்தரப்புக்கு ஆதரவான பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் வாக்குகளின்மீது குறிவைத்தார்களே தவிர, அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதில் அவர்களுக்கு எத்தகைய ஆர்வமோ விருப்பமோ இருக்கவில்லை. மாறாக, இன்றும்கூட, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வடக்கு-கிழ்கில் நிலைநிறுத்துவதற்கான தொடர்ச்சியான பல்வேறுபட்ட நிகழ்ச்சி நிரல்களை நடாத்தி வருவதையே நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம்.

இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ்த் தேசிய இனத்தை அழித்தொழிக்கும் உங்கள் நோக்கங்கள் அனைத்தையும் நாங்கள் இறுதிவரை எதிர்ப்போம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தமிழ் மக்களை அழித்தொழித்துவிடலாம் என்ற உங்களது நீண்டகால நடவடிக்கைகளில் எவ்வளவு அழிவைச் சந்தித்திருக்கிறீர்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். உங்களது தூரப்பார்வையற்ற, தேசப்பற்றற்ற கொள்கைகளும் நடவடிக்கைகளும் முழு இலங்கையையும் மிக மோசமான மீளமுடியாத பொருளாதார சீர்குலைவிற்குள் கொண்டுசென்றுள்ளதை கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் நிகழ்ச்சி நிரலைத் தொடர்ந்தும் மன்னெடுப்பீர்கள் என்றால் போராட்டகுணம் கொண்ட தமிழ் மக்கள் இறுதிவரை போராடுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த நாட்டில் ஒரு நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்யுங்கள்.

spot_imgspot_img

More like this
Related

நுவரெலியாவில் 6 பேர் மாயம்

நுவரெலியாவில் பெய்த கனமழை மற்றும் வானிலை தொடர்பான சம்பவங்களால் மாவட்டம் முழுவதும்...

ஹட்டன் மண்சரிவில் 4 பேர் மாயம்

ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்...

ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்

06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்