கணவர் கறுப்பாக இருந்ததால் பொய் புகார் கூறி அவமதித்த மனைவிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பெங்களூருவை சேர்ந்த ரமேஷ் குமார். கடந்த 2007ம் ஆண்டு ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒருபெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ரமேஷ் குமார் கறுப்பாக இருப்பதால் அவருக்கும் அவரது மனைவிக்கும் சண்டை வந்துள்ளது.
இந்நிலையில், ராதா தன் கணவர் மீது போலீஸில் வரதட்சணை புகார் கொடுத்துள்ளார். இதனால் ரமேஷ் குமார் மற்றும் அவரது தாயார் மீது குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ராதா தன் கணவரை பிரிந்து தனியாக வசித்தார். எனவே ரமேஷ் குமார் கடந்த 2012ம் ஆண்டு விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடினார்.
அதில், ‘‘நான் கறுப்பாக இருப்பதால் என் மனைவி என்னை வெறுக்கிறார். என் நிறத்தை குறிப்பிட்டு பலமுறை திட்டியுள்ளார். நான் வரதட்சணை கொடுமை செய்வதாகவும், வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு கொண்டிருப்பதாகவும் பொய் புகார் கூறினார்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை மனைவி மறுத்ததோடு, கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருப்பதாக அவர் கூறினார். மனுதாரர் தன்னை தாக்கியதாகவும், அவரது குடும்பத்தினர் தன்னை சரியாக நடத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து ரமேஷ் குமாரின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. அவரது கருத்துக்கு ஆதாரமில்லையென குறிப்பிட்டது.
இதையடுத்து ரமேஷ் குமார் கடந்த 2017ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் அலோக் ஆரதே, அனந்த் ராமநாத் ஹெக்டே ஆகியோர் கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கை விசாரித்தனர். நேற்று முன்தினம் இருவரும் இவ்வழக்கில் தீர்ப்பு அளித்தனர்.
கணவர் தகாத உறவு வைத்துள்ளார் என்ற மனைவியின் குற்றச்சாட்டின் சாட்சியங்களை ஆய்வு செய்த நீதிமன்றம், “கணவன் ஒரு பெண்ணுடன் தகாத உறவை வைத்திருக்கிறான் என்ற மனைவியின் வாதத்தை ஏற்க ஏற்கத்தக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை. பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் குறிப்பிடப்படாததால், அந்தப் பெண்ணிற்கு பிறந்த குழந்தை ரமேஷ் குமார் உடையது என்பதற்கான ஆதாரம் எந்தப் பதிவுகளிலிருந்தும் வெளிவரவில்லை.
இந்த நிலையில், அந்த பெண்ணுடன் தகாத உறவை வைத்துள்ளதாக கணவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் பொறுப்பற்றவை என்று நீதிமன்றம் கருதியது. “மனுவில் அத்தகைய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால், அத்தகைய குற்றச்சாட்டு யாருக்கு எதிராக முன்வைக்கப்படுகிறதோ, அவர் மிகப்பெரிய மனக் கொடுமைக்கு ஆளாவார் என்ற முடிவுக்கு வரலாம்.” என குறிப்பிட்டது.
கணவரின் குணாதிசயங்கள் தொடர்பான ஆதாரமற்ற மற்றும் பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளின் விளைவை குடும்ப நீதிமன்றம் பரிசீலிக்கத் தவறிவிட்டது என்று நீதிமன்றம் மேலும் கூறியது.
மனைவி மீதான குறுக்கு விசாரணையில் கணவருடன் மீள சேர ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் புகார்கள் எதையும் திரும்பப் பெறத் தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
“மனைவி கணவருடன் இணைய விரும்பவில்லை என்பதையும், கணவன்-மனைவி இடையே பெரிய பிளவு இருப்பதையும் இந்த உண்மை தெளிவாக நிறுவுகிறது. வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளில், கணவருடன் சேர்ந்தாலும், புகாரை வாபஸ் பெற ஒப்புக்கொள்ளாத மனைவியின் நடத்தை, மனைவி கணவனை மோசமாக நடத்தியதாக கணவனின் வாதத்தை நிரூபித்துவிடும்“ என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அத்துடன் ‘‘விசாரணையில் கணவர் கறுப்பாக இருந்ததால் மனைவி அவரை அவமானப்படுத்தியது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவரை நிற வெறியோடு ஒடுக்குவது கடுமையான குற்றமாகும். இந்த கொடுமையை ஏற்க முடியாது. கணவரை பிரிந்து செல்வதற்கு தெரிவித்த காரணங்கள் நம்பும்படியாக இல்லை. எனவே கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதுடன், கணவருக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.




