29.6 C
Jaffna
March 4, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

பறாளாய் முருகனுக்கு வந்த சோதனை: உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் வர்த்தமானியா?

யாழ்ப்பாணம், சுழிபுரம் கிராமத்தில் உள்ள பறாளாய் முருகன் கோயிலில் உள்ள அரச மரத்தை, சங்கமித்தையுடன் தொடர்புபடுத்தி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவினால் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானியின்படி, பறாளாய் முருகன் கோயிலின் தல விருட்சமான அரச மரம், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதமே இரகசியமாக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுதுதான் அது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

முருகனின் தல விருட்சம் வர்த்தமானியின்படி சங்கமித்த போதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட J/174 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள பறாளாய் முருகன் ஆலயத்துக்கும், இந்த வர்த்தமானி ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் உருட்டு

தொல்லியல் திணைக்களத்தின் உரிமைகோரல்கள் தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள வரலாற்றாசிரியர்கள் கேள்வியெழுப்பி வருவது மட்டுமல்ல, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய சில கேள்விகளும், அதற்கு வலுச்சேர்த்துள்ளது.

இலங்கையில் தமிழ் பௌத்தம் இருந்தது என்பது இலங்கை தொல்லியல் துறைக்கு தெரிந்திருக்குமா என்ற பலத்த சந்தேகமும் எழுப்பப்பட்டு வருகிறது. சில ஐதீகங்கள், சில பிக்குகள் சொல்லும் தகவல்களின் அடிப்படையில் தொல்லியல் திணைக்களம் கண்மூடித்தனமாக செயற்பட்டு வருகிறது என்ற வலுவான விமர்சனம் பல தரப்பிலும் உள்ளது.

அண்மையில் தொல்லியல் திணைக்கள பணிப்பாளருக்கு ஜனாதிபதி நல்ல சூடும் வைத்திருந்தார். பிக்குகள் சொல்கிறார்கள், பணம் தருபவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக தொல்லியல் திணைக்களம் ஆய்வு செய்ய முடியாது என நேரடியாக குறிப்பிட்டிருந்தார்.

பிக்குகள் சொல்வதை கேட்டுத்தான் தொல்லியல் திணைக்களம் செயற்படுகிறது என பார்த்தால், தற்போது இராணுவம் சொல்வதையும் கேட்டு தொல்லியல் திணைக்களம் செயற்படுகிறதா என்ற வலுவான கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில், பறாளாய் முருகன் கோயிலின் தல விருட்சமான அரச மரத்தை குறிவைத்து, கடந்த 4, 5 வருடங்களாக இராணுவத்தினரே வந்து செல்கின்றனர். அது சங்கமித்தையுடன் தொடர்புடையது, அரச மரத்தின் அடியில் செங்கல் ஆவணம் உள்ளதென அங்கு வந்த இராணுவத்தினர், ஆலயத்துடன் தொடர்புடையவர்களுடன் தனிப்பட்ட உரையாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.

அரச மரத்தை இராணுவம் குறிவைக்க தொடங்கியதும், அதை சுற்றி மதில் அமைத்து விட்டனர் ஆலய நிர்வாகத்தினர். இதனால் இராணுவத்தினரால் அரச மரத்தை நினைத்தது போல அணுக முடியவில்லை. அரச மரத்தை பார்வையிட இராணுவம் சில முறை முயன்றபோதும், ஆலய நிர்வாகம் அதற்கு அனுமதியளிக்கவில்லை. கொரோனா காலகட்டத்தில் இராணுவமும், சிஐடியினரும் ஆலய பகுதியை சுற்றித்திரிந்து, அரச மரம் பற்றி பொதுமக்களிடம் கேட்டுத்திரிந்ததாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சோழியபுரம்

இன்றைய சுழிபுரம் முன்னர் சோழியபுரம் என்றே அழைக்கப்பட்டது. சோழ மன்னர்கள் ஆட்சி செய்த பகுதி என்பதால் அவ்வாறு அழைக்கப்பட்டது. பின்னர், அது மருவி சுழிபுரமாகியது.

தற்போது சர்ச்சைக்குரியதாகியுள்ள பறாளாய் முருகன் கோயிலுக்கு அடுத்ததாக பிள்ளையார் கோயிலொன்று உள்ளது. அது சோழர் காலத்தில் அமைக்கப்பட்டது. இரண்டு ஆலயங்களின் வெளிவீதிகளும் ஒன்றே.

அந்த பகுதியை சுற்றிலும் வயல்கள் உள்ளன. விவசாயிகள் குறிஞ்சிநில கடவுளான முருகனின் சிலையை வைத்து வழிபட ஆரம்பித்து, பறாளாய் முருகன் கோயில் உருவானது.

பறாளாய் முருகன் கோயில் 1762 ஆம் ஆண்டு கோயிலுக்கு எழுதப்பட்ட உறுதி தற்போது ஆலய நிர்வாகத்திடம் உள்ளது. ஆரம்பத்தில் தனியார் சொத்தாக இருந்த கோயில், பின்னர் பரிபாலனசபையிடம் கையளிக்கப்பட்டது.

ஆலயம் அமைக்கப்பட்ட பின்னரே, அரச மரம் நடப்பட்டது என ஆலய நிர்வாகத்தினர் அடித்துக் கூறுகிறார்கள்.

தற்போது நவீன ஆராய்ச்சி வசதிகள் உள்ளதால், மரத்தின் வயதை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

2000 வருடங்களின் முன்னர் இலங்கைக்கு வெள்ளரசு மர கிளையை கொண்டு வந்த சங்கமித்தை, சம்புத்துறையில் இறங்கியதாக மகாவம்சம் கூறுகிறது. அவர் கொண்டு சென்ற வெள்ளரசு மரக்கிளை அனுராதபுரம் மகாபோதியில் தற்போதும் நிற்பதாகவும், அதன் கிளையொன்று சம்புத்துறையில் நடப்பட்டதாகவும் சிங்கள ஐதீக வரலாறு சொல்கிறது.

இந்த கதைக்குள் எங்கோ இடைச்செருகலாக பறாளாய் முருகன் கோயிலை இழுத்து வந்தவர் யார் என்பதுதான் இப்போது புரியாத புதிராக உள்ளது. அந்த வீதியால் சென்ற இராணுவச்சிப்பாய் ஒருவர்தான் அரச மரத்தை கண்டதும், மேலதிகாரிகளுக்கு தகவலளித்து புதிய வரலாறு எழுதினாரா என்பதும் தெரியவில்லை.

சட்டவிரோத வர்த்தமானி

தற்போது வெளியாகியுள்ள வர்த்தமானி சட்டவிரோதமான வர்த்தமானியென சட்டத்துறை சார்ந்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பத்திரிகைகளில் இன்று செய்தி வெளியாகிய பின்னரே, பறாளாய் முருகன் ஆலய அரச மரம் வர்த்தமானியிடப்பட்டதை வலிகாமம் மேற்கு பிரதேச செயலகம் அறிந்துள்ளது. இந்த விவகாரம் பற்றி அவர்களுக்கும் எதுவும் தெரியாது.

வர்த்தமானியிடப்படுவதற்கு முன்னதாக ஆலய நிர்வாகத்துடனும் யாரும் கலந்துரையாடவில்லை. யாரும் ஆய்வு செய்யவில்லை. சுருக்கமாக சொன்னால் எதிரி முகாம்களை வேவு பார்ப்பதை போல, உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் வர்த்தமானியிடப்பட்டுள்ளது என்றுதான் கொள்ள வேண்டும்!

அனைத்து விதிமுறைகளையும் மீறி வர்த்தமானியிடப்பட்டுள்ளதால், வர்த்தமானியை இரத்து செய்யக்கோரி வழக்கு தொடர ஆலய நிர்வாகத்தினர் யோசனை செய்து வருகிறார்கள். இது தொடர்பில் கொழும்பில் உள்ள பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணியொருவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அவர் இன்று மாலையே தனது கனிஸ்ட சட்டத்தரணிகளை ஆலயத்துக்கு அனுப்பி, அனைத்து ஆவணங்களையும் பெற்றுள்ளார்.

அடுத்த ஓரிரு நாட்களில் வழக்கு தொடரலாமென திட்டமிடப்பட்டது.

இதற்குள், இன்று மாலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் கோயிலுக்கு சென்றுள்ளனர். வர்த்தமானிக்கு எதிராக வழக்கு தொடர்வது புத்திசாலித்தனமல்ல என அவர்கள் ஆலய நிர்வாகத்துக்கு ஆலோசனை வழங்கினர். ஒருவேளை, வழக்கு தோல்வியடைந்தால், அது சங்கமித்தை போதியென நீதிமன்றமே உத்தரவிட்டதாக ஆகிவிடும், அதன் பின்னர் எதுவும் செய்ய முடியாதென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தை நாடுவதை விட்டு விட்டு, மக்களை அணிதிரட்டி ஆலய முன்றலில் போராட்டம் நடத்துவோம் என அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

Leave a Comment