ரஜினியின் ‘ஜெயிலர்’ பட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் 10ஆம் திகதி வெளியாகிறது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகிபாபு, வசந்த் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் ரஜினியின் பேச்சு, அவர் சொன்ன குட்டிக் கதை ஆகியவை சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பின. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
ட்ரெய்லரை பொறுத்தவரை ‘பாட்ஷா’ பாணியில் தொடக்கத்தில் மாணிக்கமாக வீட்டில் பணிவிடை செய்துகொண்டு சாதுவாக இருக்கிறார் ரஜினி. ஒரு கட்டத்தில் சம்பவத்தில் இறங்கும் அவர் மாணிக்கத்திலிருந்து ‘பாட்ஷா’வாக மாறுகிறார். போலீசாக இருக்கும் வசந்த் ரவியின் தந்தையாக குடும்பத்தையும் காக்கும் பொறுப்பை சுமக்கிறார் என தோன்றுகிறது. ட்ரெய்லரின் ஒரு காட்சியிலும் கூட தமன்னா இல்லை.
‘ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது. வீச்சு தான்’ என்ற வசனத்துக்குப்பிறகு “மும்பையில நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க” என்பதற்கு ஏற்ப சில ஃப்ளாஷ் பேக் காட்சிகளும் வந்து செல்கின்றன. நெல்சனின் வழக்கமான பயந்த தீபா கேரக்டரை இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் ரீப்ளேஸ் செய்திருக்கிறார். அனிருத் தன் பங்கிற்கு மாஸ் பிஜிஎம்மை அள்ளி தெளித்திருக்கிறார்.