கடந்த இரண்டு மாதங்களில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் இருந்த சுமார் 120 மில்லியன் ரூபா பெறுமதியான இரும்பு திருடப்பட்டுள்ளதாக இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜகத் தர்மப்பிரிய தெரிவித்தார்.
தொழிற்சாலைக்கு உரிய பாதுகாப்பு இல்லாததால், சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்கள் தொழிற்சாலை வளாகத்துக்குள் நுழைந்து இரும்பை எடுத்துச் செல்வதாகவும், இது தொடர்பாக பலமுறை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தலைவர் மேலும் கூறியதாவது,
1990-91 ஆம் ஆண்டு மோதல்களின் போது இந்த தொழிற்சாலை மூடப்பட்டது. அதன்பின் இந்த தொழிற்சாலையில் எதுவும் உற்பத்தி செய்யப்படவில்லை.
தொழிற்சாலையில் பாதுகாப்புக்காக இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், சொத்துக்கள் ஓரளவு பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கில் இராணுவத்தினரை குறைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் படையினர் அகற்றப்பட்டதால், பாதுகாப்புக்கு அவர்களை ஈடுபடுத்துவதற்கு வழியில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் விளைவாக சில நபர்கள் தொழிற்சாலை மற்றும் தொழிற்சாலை வளாகத்தில் இரும்பை திருடுகிறார்கள்.
தொழிற்சாலையின் பல கட்டிடங்கள் இரும்பினால் கட்டப்பட்டுள்ளதாகவும், பல இலட்சம் ரூபா பெறுமதியான வளாகத்தில் அதிகளவிலான இரும்புகள் இருந்ததாகவும் தலைவர் தர்மபிரியா தெரிவித்தார்.
இரும்பு திருட்டைத் தடுப்பதற்கும் பாதுகாப்பிற்காகவும் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சில சமயங்களில் இவர்களுக்கும் பிரதேசவாசிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை எழுவதாகவும், இந்த நிலை மோதலாக மாறினால் பாரியளவிலான அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரும்பை அல்லது டெண்டர்கள் மூலம் ஏலம் விட வேண்டும் என்ற நோக்கத்தில் 2019ல் மூன்று அமைச்சகங்களின் செயலாளர்கள் தலைமையில் டெண்டர் வாரியம் ஏற்படுத்தப்பட்ட போதிலும், அந்த நடைமுறைகளில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தலைவர் கூறினார்.
இரும்பை வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் இடத்திலிருந்து அகற்றி, அகற்றும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.
மூடப்பட்டுள்ள கேகேஎஸ் சீமெந்து தொழிற்சாலையை மீண்டும் திறக்கும் பட்சத்தில் 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டை ஒன்று தலா 1000 ரூபாவிற்கு குறைவாக விற்பனை செய்ய முடியும் என தலைவர் தெரிவித்தார்.
அவர் இவ்வாறு குறிப்பிட்டாலும், இராணுவத்தின் வசம் தொழிற்சாலையிருந்தபோதும் பெருமளவு இரும்புத்திருட்டு நிகழ்ந்ததாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.