குளியாப்பிட்டிய நீதிமன்ற வளாகத்தில் வழக்குப் பொருட்களாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த 27 எரிவாயு சிலிண்டர்களைத் திருடிய நீதிமன்ற ஊழியர் கைது செய்யப்பட்டதாக குளியாப்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுமார் நான்கு இலட்சத்து முப்பத்தி இரண்டாயிரம் ரூபா பெறுமதியான 54 எரிவாயு சிலிண்டர்கள் களவாடப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், 27 சிலிண்டர்களுடன் நீதிமன்ற எழுத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த சிலிண்டர்கள் கடந்த பெப்ரவரி மாதம் முதல் காணாமல் போயுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்த நிலையில், ஏப்ரல் 21ஆம் திகதி மேலும் பல எரிவாயு சிலிண்டர்கள் காணாமல் போனதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் வாக்குமூலத்தின்படி, இரவு காவலாளியுடன் சேர்ந்து சில நாட்களில் உள் அறையில் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது. எரிவாயு சிலிண்டர்களை, எரிவாயு முகவருக்கு விற்பனை செய்ததாகவும் சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு குளியாப்பிட்டிய நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டபோது, சந்தேகநபர் அதே நீதிமன்றில் கடமையாற்றுவதால் இந்த வழக்கை இந்த நீதிமன்றில் அழைப்பது பொருத்தமானதல்ல என நீதிபதி தெரிவித்தார். அதன் பிறகு, இந்த வழக்கு மாவட்ட நீதிபதிக்கு அனுப்பப்பட்டது, ஆனால் அந்த நீதிபதி இந்த நீதிமன்றத்தின் மாஜிஸ்திரேட்டாக சில காலம் இருந்ததால், அவர் வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டார், எனவே இந்த நீதிமன்றத்தில் மீண்டும் குளியாப்பிட்டிய நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
எனினும் சந்தேகநபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.