வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பத்தில், படுகாயமடைந்த மற்றொருவரும் உயிரிழந்துள்ளார்.
ஏற்கெனவே உயிரிழந்த பெண்ணின் கணவனே உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் இயங்கும் ரவுடிக்குழுக்களுக்கு இடையிலான மோதலே இந்த சம்பவத்தக்கு காரணமென பொலிசார் நம்புகிறார்கள்.
சம்பவத்தில் கொல்லப்பட்ட 21 வயதான பாத்திமா சசீமா சைடி என்பவரது ஒன்றுவிட்ட சகோதரரான சுரேஸ் என்பவரது வீட்டிலேயே தாக்குதல் நடந்துள்ளது. சுரேஸூம் முதுகில் வெட்டுக்காயத்துடன் வைத்தியசாலையில் உள்ளார்.
பாத்திமா அண்மையில் சுகந்தன் என்பவரை திருமணம் செய்து, தற்போது கொழும்பில் தங்கியுள்ளார். அந்த தம்பதிக்கு ஓமந்தையில் பெரிய வீடொன்று உள்ளது. உயர்ந்த மதில்களை கொண்ட அந்த வீட்டில் யாரும் நுழைய முடியாதபடி, உயர்ரக நாய்களும் வளர்க்கப்படுகின்றன. இதனால் வீட்டின் செயற்பாடுகள் குறித்து அயலவர்களுக்கு எதுவும் தெரிவதில்லை.
தாக்குதல் குழு வீட்டு உரிமையாளரையா அல்லது கொல்லப்பட்டவரையா அல்லது வேறு ஒருவரையா இலக்க வைத்து வந்தது என்பது இதுவரை உறுதியாகவில்லை. தக்குதல்தாரிகள் தேடி வந்தவரின் “ஏதேனுமொரு“ வர்த்தகம் தொடர்பிலான முரண்பாட்டின் விளைவாக தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
தாக்குதல் நடந்த போது உயிரிழந்த தம்பதி, வீட்டு அறையொன்றிற்குள் தங்கியிருந்துள்ளனர். வீட்டுக்குள்ளிருந்தவர்களை வெளியே செல்லுமாறு கூறிய தாக்குதல்தாரிகள், யாரும் வெளியே செல்லததால், வீட்டுக்குள் பெற்றோல் மற்றும் கழிவு எண்ணெய் ஊற்றி தீமூட்டியது.
இதேவேளை, தாக்குதல்தாரிகள் வீட்டுக்குள் நுழைந்து “சுகந்தன் எங்கே“ என வினவியதாக முன்னர் செய்தி வெளியாகியிருந்தது.
தீ பரவியதையடுத்து, அறைக்குள்ளிருந்து உயிரிழந்த தம்பதி வெளியே தப்பியோடி வந்துள்ளனர். எனினும், உயிரிழந்த 21 வயது மனைவி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கணவன் சுகந்தன் கடுமையான எரிகாயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தீக்காயம் அடைந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், சம்பவம் எப்படி நடந்தது என்பதை அறிய முடியாமல் பொலிசார் திணறுவது தாக்கிய குண்டர்களை அடையாளம் கண்டு கைது செய்வதில் பெரும் தடையாக உள்ளது. இதேவேளை, தாக்குதல்தாரிகள் தேடி வந்தவர் வவுனியாவில் ரவுடிக்குழு செயற்பாடுகளில் ஈடுபட்டவர் என்றும், பலரிடம் கப்பம் கேட்டு பணம் கொடுக்காததால் வெட்டி காயப்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.