அஸ்வசும உதவித் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி, அநீதிக்கு ஆளானவர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி, உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதமொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்க அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.டி.ஜகத் குமார இதனை தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதத்தில் கையொப்பமிடும் நடவடிக்கைகள் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், நேற்று முன்தினம் (21) வரை ஐம்பத்திரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதில் கையொப்பமிட்டுள்ளதாகவும் ஜகத் குமார குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அரசாங்கத்தின் அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளதாகவும் சுமார் எழுபது கையொப்பங்களைப் பெற்ற பின்னர் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அஸ்வசும உதவித் திட்டத்தில் குறைந்த வருமானம் கொண்ட உண்மையான ஏழை மக்களை அதிக அளவில் சேர்க்காமல் கடும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றார்.




