ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், காஷ்மீரைச் சேர்ந்த 28க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து, நகை பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
அந்த பெண்ணின் கணவர்கள் என குறிப்பிட்டு ஒரு குழு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டது.
எனினும், இவர்களில் யாரையுமே தனக்கு தெரியாது என அந்தப் பெண் மறுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர், புட்காம் மாவட்டதைச் சேர்ந்த ஒருவர் காவல் நிலையத்தில் தன்னுடைய மனைவியை காணவில்லை எனப் புகாரளித்திருக்கிறார்.
பாதிக்கப்பட்டவரின் தந்தை ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
சில மாதங்களுக்கு முன்பு ஒரு திருமணத் தரகர் என்னைத் தொடர்பு கொண்டு, திருமணத்திற்காக ஒரு ரஜோரி பெண்ணின் புகைப்படங்களைக் காட்டினார். என் மகனுக்கு சில உடல் பிரச்சனைகள் உள்ளன. உள்ளூர் இடைத்தரகர் ஒருவர் எனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும், நான் அவருக்கு இரண்டு லட்சம் கொடுத்தால் போதும் என்று கூறி என்னை அணுகினார்.
சில உறவினர்களுடன் குடும்பத்தினர் ரஜோரிக்கு சென்று சில ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்தோம். இருப்பினும், இடைத்தரகர் ஏமாற்றினார். சில நாட்களுக்கு முன், அந்தப் பெண் விபத்துக்குள்ளானதாகச் சொன்னார். அந்தப் பணத்தில் பாதியை என்னிடம் திருப்பிக் கொடுத்தார்கள். இருப்பினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டு, மற்றொரு பெண்ணின் புகைப்படங்களைக் காட்டினார்கள். நாங்கள் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தபோது, இஷா நேரத்தில் (இரவு தொழுகை) அந்த பெண் அழைத்து வரப்பட்டார்,” என்று அப்துல் அஹத் மிர் கூறினார்.
சில மணித்தியாலத்தில் திருமணம் நடந்தது.
“சில நாட்களுக்குப் பிறகு, அவர் தனது கணவரிடம் மருத்துவமனையில் பரிசோதனை செய்ய விரும்புவதாகக் கூறினார். கணவர் மருத்துவமனை டிக்கெட் எடுக்கச் சென்றார், அவர் திரும்பி வந்தபோது, பெண் (அவரது மனைவி) அந்த இடத்திலிருந்து மாயமாகிவிட்டார், ”என்று அவர் கூறினார்.
காவல்துறையினர் புகாரைப் பெற்றுக் கொண்டதற்குப் பிறகு அவரின் மனைவியின் புகைப்படத்தை வாங்கியிருக்கின்றனர். அப்போதுதான் அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண்ணை வேறு சிலரும் காணவில்லை எனப் புகார் அளித்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. சுமார் 12 க்கும் மேற்பட்ட ஆண்கள் உள்ளூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகாரளித்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, தீவிர விசாரணைக்காக களம் இறங்கியது காவல்துறை.
ஆனால், அந்த விசாரணைக்குப் பிறகு பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தப் புகார் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த தகவலில், “ஜம்மு காஷ்மீரில் ஒரு அழகானப் பெண் இருக்கிறார் என புரோக்கர் மூலம் வரன் வந்தது. எங்கள் வீட்டாரும், அந்தப் பெண்ணின் வீட்டாரும் கலந்து பேசி திருமணம் செய்து வைத்தனர். என்னிடம் நன்றாக குடும்பம் நடத்தி வந்தப் பெண், திடீரென வீட்டில் இருந்த நகைகள், பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு வெளியேறிவிட்டார்” எனத் தெரிவித்திருந்தார்.
380,000 ரூபா பணம், ஐந்து இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள தங்கத்தை அந்தப் பெண்ணுக்கு மெஹர் (உத்தரவாதமாக) எடுத்துள்ளோம் என்று பாதிக்கப்பட்ட ஒருவரின் தந்தை கூறினார்.
இதே பாணியில்தான் புட்காம் மாவட்டத்தில் மட்டும் 28க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார்.
மேலும், அவர்களின் நகை, பணம் உள்ளிட்ட விலை உயர்ந்தப் பொருள்களை திட்டமிட்டு கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்.
ஜாஹீன், இல்யாஸ் மற்றும் ஷஹீனா போன்ற வெவ்வேறு பெயர்களைக் கொண்டு பல்வேறு மாற்றுப்பெயர்களில் அந்த பெண் மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவரது உண்மையான பெயர் ஷஹீனா என்று கூறப்படுகிறது.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் அந்தப் பெண் மட்டும் தனியாக இயங்கவில்லை என்றும், அந்தப் பெண்ணுக்கு அவரின் குடும்பமே உதவுவதால்தான் இவ்வளவு ஆண்களை ஏமாற்ற முடிந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆண்கள் குழுவாக ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட பெண் மீது ஜம்மு காஷ்மீர் காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட புரோக்கர்கள், “கொள்ளையில் ஈடுபட்ட பெண்ணுக்கும், எங்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லை. திருமணம் நடத்தி வைத்தால் அதிக கமிஷன் தருவதாக கூறினார்கள்” என்ற ஒரே பதிலையே அனைவரும் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும், பெரும்பாலான ஆண்கள், அந்தப் பெண் உள்ளிட்ட அவரின் கூட்டாளிகளிடம் ரூ.4 முதல் 6 லட்சம் வரை இழந்திருக்கிறார்கள். விசாரணைகள் தொடரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்ட பெண் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.
இதற்கிடையில், குற்றம்சாட்டப்பட்ட பெண் இன்று ஊடகங்கிடம் பேசி, தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
ரஜோரியில் வசிக்கும் ஷஹீனா அக்தர் தான் இரண்டு திருமணத்தை விட அதிகமாக செய்யவில்லையென்றார்.
ஆரம்பத்தில் அவர் ரஜோரியில் திருமணம் செய்துகொண்டதாகவும், இரண்டு குழந்தைகள் பிறந்ததாகவும் கூறினார். அவரது கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும், அவரை விவாகரத்து செய்த பிறகு அவர் மறுமணம் செய்து கொண்டதாகவும் ஷாஹீனா கூறினார்.
“நான் ரஜோரி நகரில் தையல்காரராக வேலை செய்து கொண்டிருந்தேன். இந்த நேரத்தில் புத்காமில் உள்ள தூத்பத்ரியில் வசிக்கும் முகமது அல்தாஃப் மிர் என்பவரை நான் சந்தித்தேன், அவர் என்னை காஷ்மீருக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார், அங்கு என் சகோதரி ஒருவர் வசிக்கிறார். அவரும் எனது சகோதரியின் கிராமத்தில் வசிப்பதால் அவர் என்னை தனது காரில் உட்காரச் சொன்னார், ”என்று ஷஹீனா கூறினார்.
சகோதரியின் கிராமத்தில் இறக்கிவிடுவதாகக் கூறியவர், என்னை வலுக்கட்டாயமாக அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று, என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார், மேலும் ரஜோரியில் எனது வீட்டைக் கட்டித் தருவதாகவும் உறுதியளித்தார். “நான் இரண்டு முறைக்கு அதிகமாக திருமணம் செய்து கொண்டதாக யாராவது என்னிடம் காட்டினால், என்னை தூக்கிலிட நீதிமன்றத்திற்கு சுதந்திரம் உண்டு” என்று அவர் கூறினார்.
ஸ்ரீநகரின் பிரஸ் காலனியில் தனது கணவர்கள் என குறிப்பிட்டு சிலர் நடத்திய போராட்டத்தையும் விமர்சித்தார். அவர்கள் அனைவரையும் போலி என்று குறிப்பிட்ட ஷஹீனா, அந்த நபர்களில் யாரையும் தனக்குத் தெரியாது என்று கூறினார். “எனது கணவர் என்னை விவாகரத்து செய்ததாகக் கூறியதும், நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன்.இவை அனைத்தும் அல்தாப்பின் சதியாக இருக்கலாம்” என்று ஷஹீனா கூறினார்.
“ஒருவரை இழிவுபடுத்தும் முன் மக்கள் உண்மைகளை கண்டறிய வேண்டும். அல்தாப்பின் விவாகரத்து வழக்கு பல மாதங்களாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஒரு வருடம் முன்புதான் நான் விவாகரத்து பெற்றேன். நான் குற்றவாளியாக இருந்திருந்தால், நான் ஏன் காஷ்மீருக்குச் செல்வேன், ”என்று அவர் கூறினார்.
தனது கணக்கில் 7,000 ரூபாய் மட்டுமே உள்ளது என்று கூறினார். “ஆம், சில மாதங்களுக்கு முன்பு, வங்கி இருப்பு 1,00,000 ரூபாயாக இருந்தது, இது அல்தாஃப் எனக்குக் கொடுத்த தாபரிப்பு பணமாகும்” என்று ஷஹீனா கூறினார்.
தனக்குப் பணத்தை அனுப்பியதாகக் கூறும் நபர்களிடம் தங்கள் கூற்றை நிரூபிக்கும்படியும் கேட்டார். “அவர்களில் யாராவது எனக்கு ஒரு ரூபாய் கொடுக்கப்பட்டதாக காட்டினால், நான் நீதிமன்றத்தில் சரணடைவேன், நீதிமன்றம் என்னை தண்டிக்க முடியும்” என்று ஷஹீனா கூறினார்.
தான் காஷ்மீரில் இருந்து ஓடிவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், “காஷ்மீரைச் சேர்ந்த எனது இரண்டாவது கணவர் அல்தாப் என்னைத் தாக்கி அனைத்து விதமான குடும்ப வன்முறைகளுக்கும் ஆளாக்கினார். அவர்தான் (அல்தாப்) என்னை ரஜோரிக்கு அழைத்துச் சென்று அங்கே இறக்கிவிட்டார். நான் காஷ்மீரில் ஒரு மாதம் மட்டுமே இருந்தேன். அடுத்த ஆறு மாதங்களுக்கு அவர் என் இருப்பிடத்தைக் கூட தேடவில்லை. அதன் பிறகுதான் எனக்கு விவாகரத்து பேப்பர் அனுப்பினார். இப்போது ஒரு வருடம் முடிந்துவிட்டது, மேலும் அவர் மற்றொரு நாடகத்தைத் தொடங்கியுள்ளார்.
எனது சமூக நற்பெயருக்கு பெரும் கேடு விளைவித்துள்ளனர். “என்னால் வீட்டை விட்டு வெளியே வர முடியாது. நான் வெளியேறுவது கூட கடினமாகிவிட்டது, ”என்று ஷஹீனா கூறினார், அதே நேரத்தில் அதிகாரிகள் தலையிட்டு உண்மையான குற்றவாளிகளை தண்டிக்குமாறு கேட்டுக் கொண்டார்.




