றோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு அரசியலமைப்புக்கு அமைவாக பொதுமன்னிப்பு வழங்கி, சட்டரீதியாக விடுதலை செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உயர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
குற்றவாளிiய ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்யும் தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி மகளிர் ஊடக அமைப்பு தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா இந்த அறிவித்தலை விடுத்தார்.
எஸ். துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணை நடைபெற்று வருகிறது.
மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா, இந்த பிரதிவாதிக்கு பொதுமன்னிப்பு வழங்குவது அரசியலமைப்பின் 34 வது சரத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
மனுதாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் நடவடிக்கைகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி சிறிசேன மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரால் 2016ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதி உட்பட 70 பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.
இந்த பொதுமன்னிப்பு வழங்குவதில் முறையான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருப்பதாக நீதிபதி யசந்த கோதாகொட கூறினார்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதியின் சட்டத்தரணி, அரசியலமைப்பின் பிரகாரம் முறையான நடைமுறைகளை பின்பற்றி முன்னாள் ஜனாதிபதி இந்த மன்னிப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் ஒருபோதும் தன்னிச்சையாக செயற்படவில்லை எனவும் வலியுறுத்தினார்.
வழக்கு விசாரணை வரும் 17ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ரோயல் பார்க் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பொதுமன்னிப்பு வழங்குவதிலும் விடுதலை செய்வதிலும் ஜனாதிபதி சட்ட நடைமுறையை பின்பற்றவில்லை என்று மனுதாரர் குறிப்பிடுகிறார்கள்.
இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளித்து அதனை இரத்துச் செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.