யாழ்ப்பாணம், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 28 ஆம் ஆண்டு நினைவுதினம் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூரப்பட்டது.
சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் பலியாகினர்.
அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல், விமான தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.
அன்றைய காலை மக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது விமானத் தாக்குதல் நடந்தது.
இக் குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 147 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகியிருந்தனர். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.