மேட்ரிமோனியில் திருமணமாகாத ஆண்களைக் குறிவைத்துப் பழகி, ஆசைகாட்டிப் பணம் பிடுங்கி மோசடிசெய்த பெண்ணை, போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த மோகன் (33) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற இளைஞர், ஆவடி அருகிலுள்ள அயப்பாக்கத்தில் உள்ள தனியார் கால் சென்ட்டரில் பணியாற்றி வருகிறார். இவர், தனது பெற்றோரின் அறிவுறுத்தலின்படி, தெலுங்கு மேட்ரிமோனியில் தனது விவரங்களைப் பதிவுசெய்து பெண் தேடியுள்ளார். அப்போது அவருக்கு, ஆந்திரா மாநிலம், மதனப்பள்ளியைச் சேர்ந்த ஷ்ரவண சந்தியா என்பவரின் வரன் வந்திருக்கிறது. இருவருக்கும் பிடித்துப்போக, இருவரும் பேசிவந்திருக்கிறார்கள். சந்தியா தனது புகைப்படங்களை அனுப்பியிருக்கிறார்.
அந்தப் புகைப்படங்கள் மிகவும் பிடித்துப்போக, மோகன் தொடர்ந்து அவருடன் பேசிவந்திருக்கிறார். சந்தியாவும் தனது அந்தரங்க படங்களை மோகனுக்கு அனுப்பிவைத்திருக்கிறார். சந்தியாவை மிகவும் பிடித்துப்போகவும் அவர் கேட்கும்போதெல்லாம் மோகன் அவருக்குப் பணம் அனுப்பி வந்திருக்கிறார். அதோடு, அவர் சொன்ன முகவரிக்கு 65,000 ரூபாய் மதிப்புடைய செல்போனையும் வாங்கி அனுப்பிவைத்திருக்கிறார்.
இப்படி மோகன், சந்தியாவுக்கு சிறுக சிறுக 9 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பிவைத்திருக்கிறார். அதே சமயத்தில் எப்போது திருமணம் குறித்துக் கேட்டாலும், அதற்கு சந்தியா சரியாக பதில் சொல்லாமல் இருந்திருக்கிறார். இதில் சந்தேகமடைந்த மோகன், தன்னுடைய பணத்தைத் திருப்பிக் கேட்டிருக்கிறார்.
அதற்கு சந்தியா,மோகனின் செல்போன் என்னை பிளாக் செய்திருக்கிறார். ஏதோ தவறு நடக்கிறது என்றுணர்ந்த மோகன், இது குறித்து ஆவடி காவல் ஆணையரகத்துக்கு இணையவழி குற்றப்பிரிவில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவுசெய்த ஆவடி போலீஸார், இது குறித்து விசாரணை நடத்தத் தொடங்கினர். சந்தியாவின் செல்போன் எண் சிக்னலை ஆய்வுசெய்ததில் அவர் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து பெங்களூரு, மடிவாலா பகுதிக்குச் சென்ற ஆவடி போலீஸார், அங்கு ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்த சந்தியாவைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தியா, தெலுங்கு மேட்ரிமோனியில் விவரங்களைப் பதிவுசெய்து `ஹனி ட்ராப்’ மூலம் திருமணம் ஆகாத வயதான ஆண்களைக் குறிவைத்து, அவர்களிடம் ஆசைவார்த்தைகளைக் கூறி, பேசிப் பழகி பணம் பறிப்பதை வழக்கமாக வைத்திருந்தது தெரியவந்தது. அப்படி வரும் பணத்தில் பெங்களூருவில் பல ஆண்களுடன் பழகி ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.
அதையடுத்து அவரைக் கைதுசெய்த போலீஸார், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடமிருந்து ஒரு லேப்டாப், மூன்று செல்போன்கள், ஆறு சிம்கார்டுகளையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.