நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு ஜூலை 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.
இந்த முறைப்பாடு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் நீதிபதிகள் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டார்.
இதன்போது, பிரதிவாதி அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, இந்த வழக்கு தொடர்பான சாட்சியமாக சி.டி. நாடாக்களை ஆய்வு செய்வதற்கு பொருந்தக்கூடிய சாட்சிய சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட மனுக்களை ஜூலை 13ஆம் திகதிக்கு அழைக்கவும், நோட்டீஸ் கிடைக்கப்பெற்றதா என்பதை அன்றைய தினம் எதிர்தரப்புக்குத் தெரிவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பிரமுகர்களுக்கு பிணை வழங்குவதில் நீதவான்கள் செயற்பட்ட விதம் தொடர்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையின் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாக சட்டத்தரணிகளான பிரியலால் சிறிசேன, விஜித குமார மற்றும் இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மூன்று வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.