ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்களால் த்ரில் வெற்றிபெற்றுள்ளது. ஆஷஸ் வரலாற்றில் அவுஸ்திரேலியா அதிக ஓட்டங்களை விரட்டியடித்த 4வது வெற்றியிது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அவுஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 386 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி விளையாடியது.
சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்தது. அதிகபட்சமாக அந்த அணிக்காக ஜோ ரூட் 46 ரன்கள், ஹாரி ப்ரூக் 46 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் எடுத்தனர். 66.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து.
அவுஸ்திரேலிய அணி இந்தப் போட்டியில் 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கியது. 4வது நாள் ஆட்டநேர முடிவில் 107/3 என முடித்தது.
நேற்றைய ஐந்தாவது நாள் ஆட்டம் மழையின் காரணமாக, தாமதமாகவே தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும், கவாஜா 197 பந்துகளில் அரை சதம் அடித்து 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதேநேரம், மார்னஸ் 13 ரன்கள், ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்கள், ஸ்கொட் போலாந்து 20 ரன்கள், டிராவிஸ் ஹெட் 16 ரன்கள், கமரூன் கிரின் 28 ரன்கள், அலெக்ஸ் கேரி 20 ரன்கள் ஆட்டமிழந்தனர்.
ஒரு கட்டத்தில் இங்கிலாந்து வெற்றிபெறும் நிலையிலிருந்தது. ஆனால், 9வது விக்கெட்டுக்கு பாட் கம்மின்ஸ் மற்றும் நதன் லயன் 55 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று, வெற்றிக்கு காரணமாயினர்.
92.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. பாட் கம்மின்ஸ் 44 ரன்களும், நதன் லயன் 16 ரன்களும் எடுத்தனர்.
போட்டியின் ஆட்ட நாயகன் உஸ்மன் கவாஜா. முதல் இன்னிங்ஸில் 146, இரண்டாவது இன்னிங்ஸில் 65 ரன்கள் எடுத்தார்.
இந்தப் போட்டியில் உஸ்மான் கவாஜா 796 நிமிடங்கள் jடுப்பெடுத்தாடினார். 1998ல் பெஷாவரில் பாகிஸ்தானுக்கு எதிராக மார்க் டெய்லர் 938 நிமிடங்கள் துடுப்பெடுத்தாடினார். அதற்கு அடுத்ததாக, அவுஸ்திரேலியர் ஒரு டெஸ்ட் போட்டியில் மிக நீண்ட நேரம் துடுப்பெடுத்தாடிய சந்தர்ப்பம் இதுவாகும். 1964 இல் மான்செஸ்டரில் பாப் சிம்ப்சன் 767 நிமிடங்கள் களத்திலிருந்தார்.
இந்தப் போட்டியில் கவாஜா 518 பந்துகளை எதிர்கொண்டார். 2012ல் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக ரிக்கி பொண்டிங்கிற்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் 500-க்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்த முதல் அவுஸ்திரேலியர் கவாஜா. 2010 ஆம் ஆண்டு கபாவில் அலஸ்டர் குக் 596 பந்துகளை சந்தித்திருந்தார். அதன் பிறகு ஆஷஸ் டெஸ்டில் 500-க்கும் மேற்பட்ட பந்துகளை எதிர்கொண்ட முதல் துடுப்பாட்ட வீரர் கவாஜா.